விழுப்புரம் அருகே, நடுரோட்டில் டீக்கடைக்காரர் தீக்குளிப்பு - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


விழுப்புரம் அருகே, நடுரோட்டில் டீக்கடைக்காரர் தீக்குளிப்பு - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 20 Feb 2020 3:15 AM IST (Updated: 20 Feb 2020 3:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே நடுரோட்டில் டீக்கடைக்காரர் தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விழுப்புரம்,

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள வி.தொட்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரசாக் (வயது 42). இவர் அதே பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். இவருக்கும் இவருடைய அக்காள் மும்தாஜிக்கும் பொதுவான வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டை அப்துல்ரசாக் விற்க முயன்றுள்ளார். அதற்கு மும்தாஜ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் அப்துல்ரசாக் அதே பகுதியில் உள்ள தனது அக்காள் மும்தாஜின் மளிகை கடை எதிரே சென்று திடீரென தன் மீது மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.

இதில் பலத்த தீக்காயமடைந்த அப்துல்ரசாக்கை அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்கள் விரைந்து சென்று காப்பாற்றி அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நடுரோட்டில் டீக்கடைக்காரர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story