குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக விழுப்புரத்தில் முஸ்லிம்கள் தடையை மீறி போராட்டம் - 750 பேர் மீது வழக்கு


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக விழுப்புரத்தில் முஸ்லிம்கள் தடையை மீறி போராட்டம் - 750 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 Feb 2020 10:30 PM GMT (Updated: 19 Feb 2020 9:47 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக விழுப்புரத்தில் முஸ்லிம்கள் தடையை மீறி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 750 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை எதிர்த்தும், இந்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும், சிறுபான்மையின மக்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்திலும் இந்த 3 சட்டங்களை எதிர்த்து எதிர்க்கட்சியினர், சிறுபான்மையின மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இந்த 3 சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் அரசு தீர்மானம் நிறைவேற்றக்கோரி நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது.

அதோடு நேற்று காலை 9 மணி முதல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கர், ராஜன், ரவீந்திரன், இன்ஸ்பெக்டர்கள் கனகேசன், ராதாகிரு‌‌ஷ்ணன், ரேவதி மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு அவர்கள், இரும்பு தடுப்புகள் மூலம் தடுப்பு அமைத்தபடி பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் முன்எச்சரிக்கையாக வஜ்ரா, வருண் வாகனங்களும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் காலை 10.30 மணியளவில் தடையை மீறி கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவுவாயிலை முற்றுகையிட முஸ்லிம்கள் திரண்டு வந்தனர். அவர்கள் அனைவரையும் நுழைவுவாயிலை முற்றுகையிட விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே திரண்டு நின்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு ஜமாஅத்துல் உலமா சபை விழுப்புரம் மாவட்ட தலைவர் மவுலானா அ‌‌ஷரப்அலி தலைமை தாங்கினார். இதில் அனைத்து மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பினர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், சோ‌ஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா ஆகிய அமைப்பினர் மற்றும் அனைத்து பள்ளிவாசல் முத்தவல்லிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இவர்கள் அனைவரும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், இதனை திரும்ப பெற வலியுறுத்தியும், இந்த சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் அரசு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் தேசிய கொடியை ஏந்தியபடி கோ‌‌ஷம் எழுப்பினர். பின்னர் அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு மதியம் 1 மணியளவில் அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதற்கிடையே உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தியதாக 750 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story