ஒரு கிலோ பிளாஸ்டிக் கொடுத்தால், ஒரு கிலோ அரிசி கிராம பஞ்சாயத்து தலைவரின் அறிவிப்பால் பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக மாறி வரும் சிருவா
ஒரு கிலோ பிளாஸ்டிக் கொடுத்தால், ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்ற கிராம பஞ்சாயத்து தலைவரின் அறிவிப்பால், பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக சிருவா மாறி வருகிறது.
மங்களூரு,
உடுப்பி அருகே சிருவா கிராமத்தை சேர்ந்தவர் கே.ஆர்.பட்கர். இவர் சிருவா கிராம பஞ்சாயத்தின் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சிருவாவை பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக உருவாக்க வேண்டும் என்று கே.ஆர்.பட்கர் முடிவு செய்தார். இதற்காக அவர் கடந்த மாதம்(ஜனவரி) ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதாவது 1 கிலோ பிளாஸ்டிக் பைகள், பொருட்களை தன்னிடம் கொண்டு வந்து தருபவர்களுக்கு 1 கிலோ அரிசி வழங்குவதாக கூறி இருந்தார். இதையடுத்து தினமும் கே.ஆர்.பட்கரின் வீட்டிற்கு சிருவா பகுதியில் வசித்து வரும் மக்கள் சென்று 1 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை கொடுத்து அதற்கு பதிலாக 1 கிலோ அரிசியை வாங்கி செல்கின்றனர்.
பிளாஸ்டிக் இல்லாத நகரமாக...
இதுகுறித்து கே.ஆர்.பட்கர் கூறுகையில், நான் கிராம பஞ்சாயத்து தலைவராக பொறுப்பு ஏற்ற போது சிருவா கிராமத்தை ஏதாவது ஒரு வகையில் முன் மாதிரியாக மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி சிருவாவை பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். இதற்காக 1 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் கொடுப்பவர்களுக்கு அதற்கு பதிலாக 1 கிலோ அரிசி வழங்குவதாக கூறி ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். இந்த அறிவிப்புக்கு பிறகு தினமும் ஏராளமானவர்கள் எனது வீட்டிற்கு வந்து பிளாஸ்டிக் பொருட்கள், பைகளை கொடுத்து அதற்கு பதிலாக அரிசியை பெற்று செல்கின்றனர். இதனால் சிருவா தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத கிராமமாக மாறி வருகிறது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
Related Tags :
Next Story