மாணவர்களிடம் பாகுபாடு காட்டும் ஆசிரியர்களை கண்டித்து பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை - திட்டக்குடி அருகே பரபரப்பு
திட்டக்குடி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களிடம் பாகுபாடு காட்டும் ஆசிரியர்களை கண்டித்து, பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திட்டக்குடி,
திட்டக்குடி அடுத்த ஈ.கீரனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு சுற்றிலும் உள்ள கிராமப்புற பகுதிகளை சேர்ந்த சுமார் 70 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஒரு ஆசிரியர் மாணவ, மாணவிகளிடம் சாதியை குறிப்பிட்டு பாகுபாடு காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவ, மாணவிகள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுடன் பள்ளிக்கு நேற்று ஒன்று திரண்டு வந்து திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி மாணவ, மாணவிகளிடம் பாகுபாடு காட்டிம், ஆபாசமாக பேசி வரும் தலைமை ஆசிரியர் உள்பட 2 பேரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினர்.
தகவலறிந்த திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேலன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கிடையே பாகுபாடு இருக்கிறது. இதை அவர்கள் மாணவ, மாணவிகளிடம் காண்பித்து வருகின்றனர். இதனால் அவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே பிரச்சினைக்குரியவர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
இது குறித்து தாசில்தார் செந்தில்வேலன் விருத்தாசலம் மாவட்ட கல்வி அதிகாரி பாண்டிதுரைக்கு போன் மூலம் தெரியப்படுத்தினார். அப்போது அவர், தான் பள்ளிக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை அங்கிருந்த மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் தாசில்தார் செந்தில்வேலன் கூறியதை அடுத்து, அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story