மராட்டிய மேல்-சபையில் 22 உறுப்பினர்கள் பதவிக்காலம் விரைவில் முடிகிறது உத்தவ் தாக்கரே எம்.எல்.சி. ஆகிறார்
மராட்டிய மேல்சபையில் 22 உறுப்பினர்கள் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எம்.எல்.சி.யாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மும்பை,
மராட்டிய மேல்-சபை 78 உறுப்பினர்களை (எம்.எல்.சி.க்கள்) கொண்டது. இதில் அதிகபட்சமாக பாரதீய ஜனதாவுக்கு 22 உறுப்பினர்களும், தேசியவாத காங்கிரசுக்கு 15 உறுப்பினர்களும், சிவசேனா, காங்கிரசுக்கு தலா 13 பேரும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் வருகிற ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் 22 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
அதன்படி, மாநில கவர்னரால் நியமிக்கப்பட்ட 10 உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்ட 8 உறுப்பினர்கள், அவுரங்காபாத், நாக்பூர் பட்டதாரி தொகுதி உறுப்பினர்கள், அமராவதி, புனே ஆசிரியர் தொகுதி உறுப்பினர்களின் பதவி காலம் முடிகிறது. கட்சிவாரியாக அதிகபட்சமாக தேசியவாத காங்கிரசை சேர்ந்த 8 பேர், காங்கிரசை சேர்ந்த 6 பேரின் பதவிக்காலம் முடிகிறது. மேல்-சபை துணை தலைவரான சிவசேனாவை சேர்ந்த நீலம் கோரேயின் பதவி காலமும் நிறைவு பெறுகிறது.
உத்தவ் தாக்கரே
மராட்டிய சட்டசபை தேர்தலுக்கு பின் பாரதீய ஜனதாவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்து உள்ள முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தற்போது சட்டசபை, மேல்-சபை என இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லாமல் இருக்கிறார். அவர் முதல்-மந்திரி பதவியில் தொடர்வதற்கு 6 மாதத்துக்குள் சட்டசபை அல்லது மேல்-சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும்.
எனவே மேல்-சபையில் காலியிடம் உருவாவதால் அவர் எம்.எல்.சி.யாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story