வால்பாறையில் நவீன தொழில்நுட்ப முறையில் வனத்துறையினருக்கு காட்டுத்தீ தடுப்பு மேலாண்மை பயிற்சி


பயிற்சியை ஆனைமலை புலிகள் காப்பக துணைகள இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தொடங்கிவைப்பு
x
பயிற்சியை ஆனைமலை புலிகள் காப்பக துணைகள இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தொடங்கிவைப்பு
தினத்தந்தி 20 Feb 2020 6:46 AM GMT (Updated: 20 Feb 2020 6:46 AM GMT)

வால்பாறையில் வனத்துறையினருக்கு நவீன தொழில்நுட்ப முறையில் காட்டுத்தீ தடுப்பு மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலாண்மை பயிற்சி
வால்பாறை அட்டகட்டி பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை நவீன மேலாண்மை பயிற்சி மையத்தில் பொள்ளாச்சி, திருப்பூர்,திண்டுக்கல்,கொடைக்கானல் ஆகிய வனக்கோட்டத்தைச் சேர்ந்த வனக்காவலர், வனக்காப்பாளர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஆகியோருக்கு காட்டுத்தீ தடுப்பு மேலாண்மை பயிற்சியளிக்கப்பட்டது. இதனை ஆனைமலை புலிகள்காப்பக துணைகள இயக்குனர் ஆரோக்கியராஜ்சேவியர் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். அட்டகட்டி பயிற்சி மைய உதவி வனபாதுகாவலர் செல்வன், முதன்மை தலைமை வனபாதுகாவலரின் நேர்முக உதவியாளர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயலி அறிமுகம்
தற்போது கோடைகாலம் தொடங்கி விட்டதால் ஆங்காங்கே காட்டுத் தீ பிடிப்பதற்கு வாய்ப்புள்ளதால் வனத்துறையில் பணிபுரிவோருக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் நவீன தொழில்நுட்ப முறையில் வனப்பகுதியில் காட்டுத் தீ பிடித்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட வனச்சரகத்தின் வனப் பணியாளர்களுக்கு தானாகவே தகவல் கொடுக்கும் செயலி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் முறை குறித்து விளக்கப்பட்டது. இது குறித்து அதிகாரி கள் கூறியதாவது:-

வனப்பணியாளர்களுக்கு செயலி மூலம் காட்டுத் தீ பிடித்த வனப்பகுதி குறித்து தகவல் கிடைத்ததும்,சம்மந்தப்பட்ட வனச்சரகத்தின் வனப் பணியாளர்கள் அந்த இடம் எவ்வளவு தொலைவில் உள்ளது? அந்த இடத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைப்பதற்கு என்னென்ன உபகரணங்கள் கொண்டு செல்லவேண்டும்? காட்டுத் தீ அருகில் உள்ள வனப் பகுதிக்கு பரவாமல் தடுப்பதற்கு எந்த மாதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்? எவ்வாறு காட்டுத் தீ பிடித்தது? இதற்கு யார் காரணம் என்பது குறித்து கண்டறிந்து தீ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு
மேலும் தடுப்பு பணியில் ஈடுபடும் போது காட்டுத் தீ எரியும் இடத்தில் வனப் பணியாளர்கள் யாரும் சிக்கிக் கொள்ளாமல் தடுக்கும் முறை, காட்டுத் தீ பிடித்துள்ள வனப்பகுதியின் தன்மைகளை கண்டறிந்து அணைக்கும் முறை, மேலும் காட்டுத் தீ பரவாமல் தடுக்கும் முறை, காட்டுத் தீ பிடித்த இடங்கள் குறித்து வரைபடம் தயாரித்து பதிவு செய்யும் முறை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

மேலும் வனவிலங்குகள் காட்டுத் தீ காரணமாக வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்வதற்கும் வாய்ப்புள்ளது. அந்த பகுதிகளை கண்டறிந்து பாதுகாப்பு கொடுப்பது எப்படி என்பதுகுறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.உதவி வனபாதுகாவலர் செல்வன், விலங்கியலாளர் பீட்டர்பிரேம்சக்கரவர்த்தி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை மையத்தின் வனச்சரகர் நவீன்குமார்,வனவர் சத்தியா ஆகியோர் செய்திருந்தனர். இந்த பயிற்சி வகுப்பு வருகிற 27 -ந் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறுகிறது.

Next Story