தியாகதுருகத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும் - சட்டசபையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு கோரிக்கை


கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு
x
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு
தினத்தந்தி 20 Feb 2020 1:40 PM IST (Updated: 20 Feb 2020 1:40 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என்று சட்டசபையில் பிரபு கோரிக்கை விடுத்தார்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கள்ளக்குறிச்சி தாலுகாவில் உள்ள தியாகதுருகத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும். தியாகதுருகம் பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்களை கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் சேர்ப்பதோடு, தியாகதுருகம் பேரூராட்சியை சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தவேண்டும்.

மேலும் தியாகதுருகம் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து அதை சுற்றிலும் கடைகள் கட்டித்தரவும், உழவர் சந்தை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முடியனூர் ஊராட்சியில் இருந்து குரூர், பீளமேடு ஊராட்சியில் இருந்து கலையநல்லூர், தியாகை ஊராட்சியில் இருந்து சிறுவல் ஆகிய கிராமங்களை பிரித்து தனி ஊராட்சிகள் உருவாக்கவேண்டும்.

மேம்பாலம்
பானையங்கால் அருகே சித்தலூர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள மணிமுக்தா ஆறு மற்றும் விருகாவூர் அருகே கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டும். விருத்தாசலம் முதல் சின்னசேலம் வரை செல்லும் ரெயில் அசகளத்தூரில் நின்று செல்லவும், கண்டாச்சிமங்கலம், அசகளத்தூர் ஆகிய ஊராட்சிகளை சிறப்பு நிலை ஊராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும். தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய, நிலுவை தொகையை உடனடியாக வழங்கவேண்டும். கள்ளக்குறிச்சியில் புறநகர் பேருந்து நிலையம், ரிங் ரோடு, பாதாள சாக்கடை திட்டம், புதிய அரசு மகளிர் கலைக்கல்லூரி, அதிநவீன பூங்கா, துணை மின் நிலையம், உள் விளையாட்டு அரங்கம், விளையாட்டு மைதானம் ஆகியவை அமைத்து தரவேண்டும்.

உணவு பூங்கா
கள்ளக்குறிச்சி நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாகவும், போக்குவரத்து பகுதி அலுவலகத்தை வட்டார போக்குவரத்து அலுவலகமாகவும், வட்டார கிளை நூலகத்தை மாவட்ட மைய நூலகமாகவும், மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தை மாவட்ட அமர்வு நீதிமன்றமாகவும் தரம் உயர்த்துவதோடு, கள்ளக்குறிச்சி பகுதியில் உணவு பூங்கா அமைத்து தரவேண்டும். க.மாமானந்தல் அருகே கோமுகி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம், கீழ்பரிகத்தில் ஒரு அணை, வீரசோழபுரம் அருகே மணிமுக்தா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம், கள்ளக்குறிச்சி பகுதியில் உளுந்து, மஞ்சள், நெல் ஆகியவற்றுக்கு நேரடி கொள்முதல் நிலையம், கல்வராயன்மலை பகுதியில் கடுக்காய் தொழிற்சாலை மற்றும் சின்னசேலத்தில் தாலுகா நீதிமன்றம் அமைப்பதோடு, அங்குள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு பிரபு பேசினார்.

Next Story