ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஜப்பான் நிதி உதவியுடன் ரூ.12 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுகிறது- என்ஜினீயர் குழு ஆய்வு


ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஜப்பான் நிதி உதவியுடன் ரூ.12 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுகிறது- என்ஜினீயர் குழு ஆய்வு
x
தினத்தந்தி 20 Feb 2020 9:31 AM GMT (Updated: 2020-02-20T15:01:45+05:30)

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு ஜப்பான் நிதி உதவியுடன் ரூ.12 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அவற்றை அமைப்பதற்கான இடங்களை 6 பேர் கொண்ட என்ஜினீயர் குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது.

ரூ.12 கோடியில் உபகரணங்கள்
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வெளி நோயாளிகளாகவும், நூற்றுக்கணக்கானோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு சில துறைகளுக்கு நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லை என்ற குறைபாடு இருந்து வந்தது.

இதனால் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சார்பில் தேவையான மருத்துவ உபகரணங்கள், பரிசோதனை கருவிகளை தங்களது ஆஸ்பத்திரிக்கு வழங்க வேண்டும் என்று அரசுக்கு, கடிதம் எழுதியது. அதைத்தொடர்ந்து ஜப்பான் நாட்டின் (ஜப்பான் இண்டர்நேஷனல் கோ-ஆப்பரேஷன் ஏஜென்சி என்ற ஜிக்கா அமைப்பு) நிதியுதவியோடு தமிழக அரசின் நகர்ப்புற சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள், பரிசோதனை கருவிகள் வழங்கப்பட இருக்கிறது.

குழு வருகை
இந்த கருவிகளை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நிறுவுவதற்கு போதிய இடவசதிகள் உள்ளதா? என்பது குறித்தும், அமைக்கப்படும் இடங்களையும் ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து என்ஜினீயர் ஜெயந்த் என்பவர் தலைமையில் 6 பேர் அடங்கிய குழு நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்தது. பின்னர் அவர்கள் டீன் சுகந்தி ராஜகுமாரியை சந்தித்து பேசினார்கள்.

அதையடுத்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் பரிசோதனை கருவிகள் அமைக்கப்பட உள்ள இதயநோய் சிகிச்சை துறை, காது-மூக்கு, தொண்டை சிகிச்சை துறை, மயக்கவியல் துறை, சிறுநீரகவியல் துறை, சீறுநீரக அறுவை சிகிச்சை துறை, ரேடியாலஜி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை நேரடியாக ஆய்வு செய்தார்கள். அப்போது பொது மருந்துகள் துறை தலைவர் பிரின்ஸ் பயஸ் இடங்களை காண்பித்து, விளக்கினார்.

விரைவில்...
விரைவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் பரிசோதனை கருவிகள் வந்து சேரும் எனவும், அவை துறை வாரியாக நிறுவப்பட்டு நோயாளிகள் நலனுக்காக பயன்படுத்தப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story