மயான கொள்ளை திருவிழா ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க கூடாது; உதவி கலெக்டர் பேச்சு
மயான கொள்ளை திருவிழா ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க கூடாது என்று ஆலோசனை கூட்டத்தில் உதவி கலெக்டர் கணேஷ் கூறினார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் மாசிமாத அமாவாசையன்று மயான கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தாண்டு மயான கொள்ளை திருவிழா நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி வேலூர், காட்பாடி தாலுகாக்களில் மயானக்கொள்ளை திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், தாசில்தார்கள் சரவணமுத்து, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு உதவிகலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:–
மயான கொள்ளை திருவிழா ஊர்வலத்தின்போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். பொதுமக்களின் எண்ணிக்கை மற்றும் முந்தைய அசம்பாவித நிகழ்வுகள், பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பாதுகாப்பு பணியை போலீசார் மேற்கொள்ள வேண்டும். திருவிழாவில் அரசியல் மற்றும் மதத்தலைவர்களின் விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது. பொதுஅமைதிக்கும், பாதுகாப்பிற்கும், மதச்சார்பின்மைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் வருவாய் மற்றும் காவல்துறையினர் விதிக்கும் நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும். சிலை ஊர்வலம் மதியம் 12 மணிக்கு முன்பாக தொடங்கி, 3 மணிக்குள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் செல்ல வேண்டும். பிறமதத்தவரின் வழிபாட்டுதலங்களுக்கு எவ்வித இடையூறும் இருக்க கூடாது.
அலங்கரிப்பட்ட சாமி சிலைகளை 4 சக்கர வாகனங்களில் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். மாட்டு வண்டி, 3 சக்கர வாகனங்களில் ஏற்றி செல்லக்கூடாது. மேலும் ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிக்க கூடாது. பாலாற்றில் மாலை 5 மணிக்குள் பூஜைகளை முடித்துவிட்டு, தேர்கள் 7 மணிக்குள் நிலையை அடைய வேண்டும். ஊர்லவத்தில் விழாக்குழுவினர் பிரச்சினை ஏற்படும் வகையில் நடந்தால் காவல்துறையினர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊர்வலப்பாதையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி செய்ய வேண்டும். தேர் 10 அடி உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். அதில், எளிதில் தீப்பிடிக்க கூடிய மின்சாதனை பொருட்களை பயன்படுத்த கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில், உதவி கமிஷனர் மதிவாணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், அழகுராணி, தீயணைப்புத்துறை, மின்வாரியத்துறை, வருவாய்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து புதிய பஸ்நிலையம் அருகே பாலாற்றங்கரையில் மயான கொள்ளை நடைபெறும் இடத்தில் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடுகளை உதவி கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், உதவிகமிஷனர் மதிவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story