குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க வேண்டும்; கலெக்டர் தகவல்
வேலூர் மாவட்டத்தில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை கண்காணித்து தடுக்க வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
காட்பாடி,
வீட்டை விட்டு வெளியேறியும், வழிதவறியும் ரெயில் நிலையங்களுக்கு வந்து ஆதரவற்று திரியும் குழந்தைகள், சிறுவர்கள் மீட்கப்பட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். பெற்றோர் இல்லாமல் பாதுகாப்பான சூழல் இல்லாத குழந்தைகள் அரசு காப்பகங்களில் ஒப்படைக்கப்படுகின்றனர். இதற்கிடையே வேலூர் மாவட்டத்தில் இதுபோன்ற குழந்தைகளுக்காக முதல் திறந்தநிலை இல்லம் காட்பாடி ரெயில் நிலையத்தில் முதல் நடைமேடையின் பின்புறம் உள்ள மதுரை முதலி தெருவில் தொடங்கப்பட்டது.
இந்த இல்ல திறப்புவிழா நேற்று நடந்தது. வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி இல்லத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
நாட்டின் ஒவ்வொருவருக்கும் கல்வி, சுகாதாரம், உணவு, இருப்பிடம் ஆகியவை கட்டாய உரிமையாகும். வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் பொருளாதார இடைவெளி அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களின் மறுவாழ்விற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
இப்போதைய சூழலில் குழந்தைகள் வணிகம், பாலியல், உடல் உறுப்புகள் திருட்டு போன்றவற்றுக்காக கடத்தப்படும் நிலை உள்ளது. கடத்தப்பட்டு கொல்லப்படும் குழந்தைகளின் உடல் பரிசோதனையின்போது தான் உடல் உறுப்புகள் திருடப்பட்டது தெரிய வருகிறது. பர்மா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இது அதிகரித்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கின்றனர். அக்குழந்தைகளை பார்க்கும்போது முகம் வாடி, உறக்கநிலையிலேயே இருக்கும். இதை கண்காணித்து தடுக்க வேண்டும். பள்ளிகளில் இடைநிற்றலையும் குறைக்க வேண்டும்.
குழந்தைகளின் பாதுகாப்பு நலனை கருத்தி கொண்டு அவர்கள் எதிர்காலத்தில் நல்ல கல்வியறிவில் சிறந்தவர்களாக உருவாக்குவதன் நோக்கமாக இத்தகைய இல்லம் திறந்து வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், மாவட்ட குழந்தை நல குழுத்தலைவர் சிவகலைவாணன், காட்பாடி ரெயில்வே மேலாளர் ரவீந்திரன், காட்பாடி தாசில்தார் பாலமுருகன், அரசு பாதுகாப்பு இல்ல கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரி, இல்ல இயக்குனர் ரூபி நக்கா, மாவட்ட சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன், மாவட்ட குழந்தைகள் அலகுப்பணியாளர் சங்கீத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story