தாறுமாறாக ஓடிய லாரி, கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு


தாறுமாறாக ஓடிய லாரி, கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Feb 2020 9:45 PM GMT (Updated: 2020-02-20T20:26:22+05:30)

நாகர்கோவிலில் தாறுமாறாக ஓடிய லாரி, சாலையோர கடைக்குள் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் ஒழுகினசேரி சந்திப்பில் இருந்து வடசேரி செல்லும் சாலை மிகவும் குறுகலாக காணப்படுவதால் அந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்த நிலையில் நேற்று அதிகாலை நெல்லையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரி ஒழுகினசேரி சந்திப்பை கடந்து வடசேரி நோக்கி வந்தபோது திடீரென தாறுமாறாக ஓடியது. டிரைவர் எவ்வளவோ போராடியும் லாரியை கட்டுப்படுத்த முடியவில்லை.

தறிகெட்டு ஓடிய லாரி சாலையோரத்தில் நின்ற மின் கம்பம் மீது மோதியது. அதோடு லாரி நிற்காமல் சாலை ஓரம் இருந்த ஒரு கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்‌‌ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். மேலும் விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் கடை பூட்டி இருந்தது. கடையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

எனினும் லாரி மோதியதில் மின் கம்பம் சாய்ந் தது. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று மின் கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் லாரி மோதியதில் ஒரு கடை பலத்த சேதம் அடைந்தது. அதன் அருகே இருந்த மற்றொரு கடையும் லேசாக சேதம் ஏற்பட்டது.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story