குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்ட களத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடி


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்ட களத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடி
x
தினத்தந்தி 21 Feb 2020 4:45 AM IST (Updated: 20 Feb 2020 10:47 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்ட களத்தில் ஒரு ஜோடி திருமணம் செய்துகொண்டது.

கோவை,

கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கோவை ஆத்துபாலத்தில் உள்ள பள்ளிவாசல் மைதானத்தில் காத்திருப்பு போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். தொடர்ந்து விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு மின்விளக்குகளும் அமைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து நேற்று 2-வது நாளாக இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் பலர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

நேற்றைய போராட்டகளத்தில் ஒரு ஜோடி திருமணம் செய்துகொண்டது. குனியமுத்தூரை சேர்ந்த அப்துல்கலாம் (வயது 24), கரும்புக்கடை பூங்காநகரை சேர்ந்த ரேஷ்மா செரீன்(19) ஆகியோரின் பெற்றோர் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முடிவு செய்து இருந்தனர்.

இந்த நிலையில் போராட்ட களத்தில் திருமணம் செய்துகொள்ள மணமக்கள் முடிவு செய்தனர். இதனை பெற்றோரும் ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து போராட்ட களத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் மணமகன் அப்துல்கலாம் மணமகளுக்கு 24 கிராம் தங்கநகையை மகராக(திருமணகொடை) கொடுத்து திருமணம் செய்துகொண்டார். அங்கிருந்த ஏராளமானவர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள்.

போராட்ட களத்தில் திருமணம் செய்துகொண்டது குறித்து மணமகன் அப்துல்கலாம் கூறும்போது, ‘குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ்பெற வேண்டும் என்று வலியுறுத்தி போராட்ட களத்தில் புரட்சிகரமாக திருமணம் செய்துகொண்டோம். திருமணம் மனமகிழ்ச்சியை அளித்தாலும், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ்பெறாதது வருத்தத்தை அளிக்கிறது. இந்த சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம்’ என்று கூறினார்.

மணமகள் ரேஷ்மா செரீன் கூறும்போது, ‘இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டுள்ளனர். அனைத்து மக்களின் பிரார்த்தனையுடன் எங்களது திருமணம் போராட்ட களத்தில் நடைபெற்றுள்ளது. எனது கணவருடன் சேர்ந்து இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ்பெறக்கோரி தொடர்ந்து போராடுவேன’ என்று கூறினார்.

போராட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாஉசேன் கூறுகையில், ‘மத்தியில், பாரதீய ஜனதா அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ்பெற வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

டெல்லி மேல்-சபையில் இந்த மசோதாவை அ.தி.மு.க. ஆதரித்ததன் மூலம்தான் மத்திய அரசு நிறைவேற்ற முடிந்தது. இந்தகாரியத்தை செய்த அ.தி.மு.க. அரசு, குறைந்தபட்சம் சட்டசபையில் இதற்கு எதிரான தீர்மானத்தையாவது நிறைவேற்ற வேண்டும்’ என்று தெரிவித்தார்.

காத்திருப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Next Story