கூடலூர், மசினகுடியில் அரசு பள்ளிகளுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்


கூடலூர், மசினகுடியில் அரசு பள்ளிகளுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 21 Feb 2020 4:15 AM IST (Updated: 20 Feb 2020 10:47 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர், மசினகுடியில் அரசு பள்ளிகளுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.

கூடலூர்,

கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓவேலி அருகே மூலக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்குள் இரவில் காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 காட்டுயானைகள் மூலக்காடு அரசு பள்ளிக்குள் புகுந்தன. தொடர்ந்து கதவுகளை உடைத்து, உள்ளே சென்றன. பின்னர் மேசை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. மேலும் சத்துணவு பொருட்களை தின்றன. இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக ஓவேலி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், பட்டாசு வெடித்து காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு காட்டுயானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன.

இதையடுத்து நேற்று காலையில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்த பள்ளியை கூடலூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது 5-வது முறையாக காட்டுயானைகள் பள்ளியை சேதப்படுத்தி இருப்பதாகவும், பள்ளிக்குள் காட்டுயானைகள் வருவதை தடுக்க தடுப்புச்சுவர் அல்லது மின்வேலி அமைத்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து சூரிய மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதேபோன்று கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சி மண்வயல் அருகே கோழிகல்லி பகுதியில் காட்டுயானை ஒன்று புகுந்தது. தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த சதானந்தன் என்பவரது தோட்டத்தில் வாழைகளை தின்று சேதப்படுத்தியது. இதை கண்ட பொதுமக்கள் திரண்டு வந்து, கூச்சலிட்டு காட்டுயானையை விரட்டியடித்தனர். பின்னர் தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், காட்டுயானை சேதப்படுத்திய வாழைகளை பார்வையிட்டனர். அப்போது சேதம் அடைந்த வாழைகளுக்கான இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

மசினகுடி அருகே உள்ள மாவனல்லா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியை நேற்று காலையில் காட்டுயானை ஒன்று முற்றுகையிட்டது. பின்னர் அங்குள்ள சுற்றுச்சுவரை இடித்து, அட்டகாசம் செய்தது. அப்போது பள்ளிக்குள் மாணவ-மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர் இருந்தனர். அவர்கள் காட்டுயானையை கண்டதும், அருகில் உள்ள பள்ளி விடுதிக்குள் ஓட்டம் பிடித்தனர். இதை கண்ட காட்டுயானை, அவர்களை துரத்த முயன்றது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. எனினும் அவர்கள் விடுதிக்குள் ஓடிச்சென்று தப்பினர்.

இதையடுத்து பள்ளி வளாகத்திலேயே நீண்ட நேரம் காட்டுயானை நின்றிருந்தது. அதன்பின்னர் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. காட்டுயானை மீண்டும் பள்ளிக்குள் வராமலும், இடிந்த சுற்றுச்சுவரை கட்டி தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story