மேட்டுப்பாளையம் அருகே, சென்னாமலைக்கரடு வனப்பகுதியில் தீ - வனத்துறையினர் போராடி அணைத்தனர்


மேட்டுப்பாளையம் அருகே, சென்னாமலைக்கரடு வனப்பகுதியில் தீ - வனத்துறையினர் போராடி அணைத்தனர்
x
தினத்தந்தி 20 Feb 2020 10:15 PM GMT (Updated: 20 Feb 2020 6:51 PM GMT)

மேட்டுப்பாளையம் அருகே சென்னாமலைக்கரடு வனப்பகுதியில் தீ பற்றி எரிந்தது. இதையடுத்து வனத்துறையினர் தீயை போராடி அணைத்தனர்.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட சென்னாமலைக்கரடு வனப்பகுதி உள்ளது. இங்கு மழைக்காலங்களில் செடி-கொடிகள் வளர்ந்து பச்சை பசேலென பரந்து விரிந்து காணப்படும்.

தற்போது கோடை காலம் தொடங்க உள்ளதால் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் வறட்சி நிலவி வருவதால், வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் மற்றும் புற்கள் காய்ந்து கருகிய நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சென்னாமலைக்கரடு வனப்பகுதியின் அடிவார பகுதியில் திடீரென தீ பற்றி எரியத்தொடங்கியது.

இந்த தீ விபத்தில் வனப்பகுதியில் உள்ள செடி-கொடிகள் கொழுந்துவிட்டு எரிந்தன. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனைகண்ட அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தினர்.

அதன்பேரில் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் தலைமையில் வனவர் நவீந்தன், வனக்காப்பாளர்கள் சித்தன், தங்கராஜ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகுதீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் தீ பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story