ரே‌‌ஷன்கடை ஊழியர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் சீர்காழி அருகே போக்குவரத்து பாதிப்பு


ரே‌‌ஷன்கடை ஊழியர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் சீர்காழி அருகே போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 20 Feb 2020 11:00 PM GMT (Updated: 20 Feb 2020 7:29 PM GMT)

சீர்காழி அருகே ரே‌‌ஷன் கடை ஊழியர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவெண்காடு,

சீர்காழி அருகே அல்லி விளாகம் கிராமத்தில் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ரே‌‌ஷன் கடை இயங்கி வருகிறது. பொது மக்களுக்கு ரே‌‌ஷன்பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை. எனவே இந்த ரே‌‌ஷன் கடையை கூட்டுறவு சங்கம் மூலம் நடத்த வேண்டும் என அண்மையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது நாகை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரே‌‌ஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம், ரே‌‌ஷன்கடை ஊழியர்கள் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியதாகவும், கையெழுத்து போடவில்லை என்றால் ரே‌‌ஷன் பொருட்கள் கிடையாது என கூறியதாகவும் தெரிகிறது.

இதனையறிந்த ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி, மாவட்ட தி.மு.க. பிரதிநிதி முத்துகுமரன் ஆகியோர் விரைந்து சென்று ரே‌‌ஷன்கடை ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிய ரே‌‌ஷன் கடை ஊழியரை கண்டித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி குடிமை பொருட்கள் தாசில்தார் இந்துமதி மற்றும் பாகசாலை போலீசார் விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து போராட்டகாரர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சீர்காழி - நாகை சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story