2-ம் வகுப்பு மாணவனுக்கு கை எலும்பு முறிந்தது ஆசிரியர் தாக்கியதாக கூறி உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு


2-ம் வகுப்பு மாணவனுக்கு கை எலும்பு முறிந்தது ஆசிரியர் தாக்கியதாக கூறி உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Feb 2020 11:30 PM GMT (Updated: 2020-02-21T01:39:47+05:30)

கரூரில் பள்ளிக்கு சென்ற சிறிது நேரத்தில் 2-ம் வகுப்பு மாணவனுக்கு கை எலும்பு முறிந்தது. ஆசிரியர் தாக்கியதாக கூறி உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

கரூர் தாந்தோணிமலை சவரிமுடித்தெருவை சேர்ந்தவர் குணசேகர். இவர், கியாஸ் அடுப்பை பழுது நீக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுடைய மகன் பிரசாத் (வயது 7). இவன் தாந்தோணிமலை கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று காலை வழக்கம்போல் பிரசாத் பள்ளிக்கு சென்றான்.

பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில், பிரசாத் கீழே விழுந்து விட்டதாகவும், அவனுக்கு கையில் அடிபட்டு விட்டதாகவும் ஆசிரியர்கள், பிரசாத்தின் பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். மேலும், கரூர் கவுரிபுரத்தில் உள்ள ஒரு தனியார் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவமனையில் பிரசாத்தை ஆசிரியர்கள் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பரபரப்பு

இதையறிந்ததும், பிரசாத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். அவர்கள், ஆசிரியர் தாக்கியதால் தான் பிரசாத்திற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. எனவே இதில் தொடர்புடைய ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி சிவராமன் உத்தரவின்படி, கல்வித்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து கல்வித்துறையினரிடம் கேட்டபோது, தலைமை ஆசிரியர் அழைத்ததன் பேரில், வகுப்பு ஆசிரியர் அங்கு சென்றிருந்தார். இந்த சமயத்தில் வகுப்பில் மாணவர்கள் விளையாடி கொண்டிருந்ததில் பிரசாத்திற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதில் ஆசிரியர் யாரும் மாணவனை தாக்கவில்லை என கூறினர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story