கோபி நகராட்சி பகுதியில் தினமும் குடிநீர் வழங்கும் திட்டத்துக்கான பணி தீவிரம் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


கோபி நகராட்சி பகுதியில் தினமும் குடிநீர் வழங்கும் திட்டத்துக்கான பணி தீவிரம் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 20 Feb 2020 10:30 PM GMT (Updated: 20 Feb 2020 8:18 PM GMT)

கோபி நகராட்சி பகுதியில் தினமும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

கடத்தூர், 

கோபி நகர மக்களின் நீண்ட கால கோரிக்கையும், அத்தியாவசிய தேவையுமான தினந்தோறும் குடிநீர் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு 52 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து தற்போது நகராட்சி பகுதிகளில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் சரியான விகிதத்தில் தண்ணீரின் அழுத்தம் கிடைத்து குடிநீர் வழங்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அதேபோல் கோபி நகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, குடிநீர் சரியான முறையில் குழாய்களில் செல்கிறதா என்பதை 2 முறை சாலைகளை தோண்டி சோதனை ஓட்டம் மூலம் உறுதி செய்யப்படும். அதன் பின்னர் நகரின் அனைத்து சாலைகளையும் சீரமைத்து புதிய தார்சாலைகள் அமைக்கப்படும்.

இதுவரை குடிநீர் இணைப்பு இல்லாத வீட்டுவரி உள்ள வீடுகளுக்கும் சேர்த்து குடிநீர் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணத்தை தவணை முறையில் செலுத்தலாம்.

ஆகவே, பொதுமக்கள் இப்பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Next Story