ரூ.380 கோடியில் நீர்த்தேக்கம் நிலத்திற்கான இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை


ரூ.380 கோடியில் நீர்த்தேக்கம்   நிலத்திற்கான இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 20 Feb 2020 11:00 PM GMT (Updated: 20 Feb 2020 8:35 PM GMT)

ரூ.380 கோடியில் கண்ணன்கோட்டை நீர்த்தேக்கம் கட்டப்பட்டு வருகிற நிலையில், நிலத்திற்கான இழப்பீட்டு தொகை வழங்காததால் நீர்தேக்க திட்ட பணிகளை அனுமதிக்க முடியாது என பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவை சேர்ந்த தேர்வாய் கண்டிகை பெரிய ஏரியையும், அருகே உள்ள கண்ணன் கோட்டை ராஜன் ஏரியையும் இணைத்து கூடுதலாக நிலப்பரப்பையும் சேர்த்து ரூ.380 கோடி செலவில் கண்ணன்கோட்டை நீர்த்தேக்கம் கட்டப்பட்டு வருகிறது.

கிட்டதட்ட 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், தற்போது நிலம் கையகப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அனைத்து பணிகளையும் வருகிற மார்ச் மாதம் 30-ந் தேதிக்குள் முடித்திட தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

அதே சமயத்தில், இந்த நீர் தேக்க திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட வகையில் கண்ணன்கோட்டை கிராமத்தை சேர்ந்த 512 பேருக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் ரூ.38 கோடி வட்டியாக நிலுவை தொகை வழங்க வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

முற்றுகை போராட்டம்

இந்த தொகையை வழங்கக்கோரி கண்ணன்கோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கும், துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று கண்ணன்கோட்டை கிராமத்தில் நடைபெற்று வந்த நீர்த்தேக்க திட்ட பணிகள் அனைத்தையும் அந்த பகுதி மக்கள் திடீரென நிறுத்தினர். அங்கு பணியில் இருந்த கனரக வாகனங்களையும், பொக்லைன் எந்திரங்களையும் அவர்கள் திருப்பி அனுப்பி வைத்தனர்.

பின்னர் அதே பகுதியில் அமர்ந்து அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

முன்னாள் தலைவர்கள் மகேஷ், ராதன் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மதன், சீனு, ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி தாசில்தார் செந்தாமரை செல்வி, திட்ட செயற்பொறியாளர் திலகரசி, உதவி செயற்பொறியாளர் சுந்தரம், இளநிலை பொறியாளர் பத்மநாபன் மற்றும் பாதிரிவேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கூச்சல், குழப்பம்

அப்போது வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் மேற்கண்ட நிலுவை தொகை கிடைத்திட உரிய ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

அதிகாரிகளின் பேச்சு வார்த்தையை ஏற்காத கிராம பொதுமக்கள், நிலுவை தொகையை வழங்கிடும் வரை திட்ட பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், வழங்கப்பட்ட பின்னர் பணிகளை தொடர வேண்டும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், தாமதமின்றி திட்ட பணிகளை தொடர அனுமதிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையின்போது தெரிவித்தனர்.

இதில் உடன்பாடு ஏதுவும் ஏற்படாததால் அந்த சமரச பேச்சு வார்த்தையின்போது கூச்சல், குழப்பம் நிலவியது. இதன் முடிவாக நிலுவை தொகை வழங்குவது தொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரி தங்களை நேரடியாக அழைத்து பேச வேண்டும் என்றும், அதுவரை நீர் தேக்க திட்ட பணிகளை அனுமதிக்க முடியாது எனவும் கிராம பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் நேற்று மாலை 5 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story