பெண்ணின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் மோசடி தபால் நிலைய ஊழியர் கைது


பெண்ணின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் மோசடி தபால் நிலைய ஊழியர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2020 4:00 AM IST (Updated: 21 Feb 2020 2:17 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மோசடி செய்த தபால் நிலைய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி பாலக்கரை ஜெயில்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 33). இவர் திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். அங்கு அதே பகுதியை சேர்ந்த சரசு என்பவர் அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்கி இருந்தார்.

அவரது சேமிப்பு கணக்கு புத்தகம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து விட்டது. இதனால் புதிய புத்தகம் கேட்டு ஊழியர் ஜெயக்குமாரை, சரசு அணுகினார். இதையடுத்து அவர் போலி ஆவணம் மூலம் புதிய கணக்கு புத்தகம் தயாரித்தார்.

ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மோசடி

பின்னர் அந்த புத்தகம் மூலம் தென்னூரை சேர்ந்த சரசு என்ற பெண்ணை பயன்படுத்தி கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஜூலை மாதத்துக்குள் தபால் நிலைய சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை ஜெயக்குமார் எடுத்து மோசடி செய்தார். இதனால் பாதிக்கப்பட்ட சரசு, இதுகுறித்து தபால் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய தபால் அலுவலக கண்காணிப்பாளர் ரகு ராமகிருஷ்ணன், செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஜெயக்குமார், தென்னூரை சேர்ந்த சரசு ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ஜெயக்குமாரை கைது செய்தனர். 

Next Story