மணப்பாறை, வையம்பட்டி பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளால் தண்ணீரின்றி தவிக்கும் தீயணைப்பு வீரர்கள்


மணப்பாறை, வையம்பட்டி பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளால் தண்ணீரின்றி தவிக்கும் தீயணைப்பு வீரர்கள்
x
தினத்தந்தி 20 Feb 2020 9:01 PM GMT (Updated: 2020-02-21T02:31:34+05:30)

மணப்பாறை மற்றும் வையம்பட்டி பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளால் தண்ணீரின்றி தீயணைப்பு வீரர்கள் தவித்து வருகின்றனர்.

மணப்பாறை,

மணப்பாறையில் உள்ள தீயணைப்பு நிலைய வாகனங்களுக்கு நகராட்சியின் சார்பில் திண்டுக்கல் சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் நிரப்பப்பட்டு வந்தது. ஆனால், அந்த ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் அறையை நகராட்சி நிர்வாகத்தினர் பூட்டி சாவியை வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் இன்றி வெளியிடங்களில் பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. இந்நிலையில் தற்போதே வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் தினமும் எங்காவது ஒரு இடத்தில் தீ விபத்து நிகழ்ந்து விடுகிறது. அப்போது தீயணைப்பு துறையினர் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அதன்பின்னர் வாகனங்களில் தண்ணீர் நிரப்ப திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அடிக்கடி தீ விபத்து

சமீப நாட்களில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து தீ விபத்து ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மரம் கொழுந்து விட்டு எரிந்தது. இதேபோல் சமுத்திரம் பகுதியில் காட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இதுபோன்றுமணப்பாறை மற்றும் வையம்பட்டி பகுதி களில் அடிக்கடி தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் போதிய தண்ணீர் கிடைக்காமல் தீயணைப்பு வீரர்கள் தவித்து வருகின்றனர். இப்போதே இந்த நிலைமை என்றால் வருகிற கோடை காலத்தை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தீயணைப்பு வீரர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

ஆகவே, மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் தீயணைப்பு வாகனங்களுக்கு போதிய அளவு தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story