தர்மபுரி அருகே நிலத்தை அளவீடு செய்து வழங்க கோரி அருந்ததிய மக்கள் 2-வது நாளாக போராட்டம்


தர்மபுரி அருகே நிலத்தை அளவீடு செய்து வழங்க கோரி அருந்ததிய மக்கள் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2020 11:30 PM GMT (Updated: 2020-02-21T02:40:13+05:30)

தர்மபுரி அருகே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை அளவீடு செய்து வழங்க கோரி 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட அருந்ததிய சமூக மக்கள் அந்த நிலத்தில் குடிசைகள் அமைத்து தங்கினார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் ஆட்டுக்காரம்பட்டியில் வசிக்கும் அருந்ததிய சமூகத்தை சேர்ந்த 120 குடும்பங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 3 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அருந்ததிய சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ஆட்டுக்காரம்பட்டியில் நிலம் வழங்கப்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் மாலை திரண்ட அருந்ததிய சமூக மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு அடுப்பு வைத்து சமையல் செய்த அவர்கள் ஒப்பாரி வைத்து கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

குடிசைகள் அமைப்பு

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அந்த பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடிசைகளை அமைத்து அதற்குள் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கோவிந்தன் மற்றும் வருவாய்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அருந்ததிய மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து விடுவித்து அளவீடு செய்து தர விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அப்போது வலியுறுத்தினார்கள். குடியேறும் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் நேற்று 2-வது நாளாக பரபரப்பு ஏற்பட்டது.

Next Story