சட்டசபையில் காங். - பா.ஜனதா உறுப்பினர்கள் காரசார வாக்குவாதம் கூச்சல்-குழப்பத்தால் சபையில் அமளி


சட்டசபையில் காங். - பா.ஜனதா உறுப்பினர்கள் காரசார வாக்குவாதம்   கூச்சல்-குழப்பத்தால் சபையில் அமளி
x
தினத்தந்தி 21 Feb 2020 2:57 AM IST (Updated: 21 Feb 2020 2:57 AM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டதால் சட்டசபையில் காங்கிரஸ்-பா.ஜனதா உறுப்பினர்கள் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூச்சல்-குழப்பத்தால் சபையில் அமளி ஏற்பட்டது.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசிக்கொண்டிருந்தார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரியங்க் கார்கே, அஜய்சிங், எம்.பி.பட்டீல் உள்ளிட்டோர் எழுந்து குறுக்கிட்டு பேசினர்.

அவர்கள் பேசும்போது, “முந்தைய காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் தங்களின் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு டெண்டர் விடப்பட்டு சில இடங்களில் பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜனதா அரசு அமைந்துள்ளது. அதன் பிறகு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ள தொகுதிகளில் தொடங்கிய திட்ட பணிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த நிதி ஒதுக்கீடு வாபஸ் பெறப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கிய பிறகு இவ்வாறு செய்தால் எப்படி?. மக்களுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வது” என்று பேசினர்.

அப்போது ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர்கள் எழுந்து, தங்கள் தொகுதிகளிலும் இதே நிலை தான் உள்ளதாக அவர்கள் கூறினர்.

இக்கட்டில் சிக்கியுள்ளனர்

அதற்கு பதிலளித்த துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள், “முந்தைய கூட்டணி அரசில் துறைகளின் நிதி ஒதுக்கீட்டை காட்டிலும் 5, 6 மடங்கு அதிக நிதிக்கு ஒப்புதல் வழங்கியது. இதனால் நிதி இல்லை என்று நிதித்துறை எங்களுக்கு கடிதம் எழுதியது. அதன் காரணமாக நிதித்துறை ஒப்புதல் வழங்காத திட்டங்களை ரத்து செய்துள்ளோம்” என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய சித்தராமையா, “முந்தைய கூட்டணி ஆட்சியில் நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை எப்படி அறிவித்தனர் என்பது எனக்கு தெரியாது. ஆனால் எங்கள் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. சில இடங்களில் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் அந்த திட்டங்களை ரத்து செய்திருப்பது சரியல்ல. இதனால் அந்த தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்கு என்ன பதில் கூறுவது. அவர்கள் இக்கட்டில் சிக்கியுள்ளனர். அதனால் முதல்-மந்திரி எடியூரப்பா, தலையிட்டு இந்த திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இப்ேபாது முடியாவிட்டாலும் வருகிற பட்ஜெட்டில் ஆவது நிதி ஒதுக்க வேண்டும்” என்றார்.

கூச்சல்-குழப்பம்

அப்போது கனிம சுரங்கத்துறை மந்திரி சி.சி.பட்டீல், “நாங்கள் 6 ஆண்டுகள் என்ன கஷ்டத்தை அனுபவித்தோம். உங்கள் ஆட்சியில் நிதி ஒதுக்கீடு எப்படி செய்தீர்கள். இது அனைவருக்கும் தெரியும்” என்றார்.

இவ்வாறு காரசார வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. இதற்கு மத்தியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் எழுந்து நின்று குரலை உயர்த்தி பேசினர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. அதைதொடர்ந்து அமளி ஏற்பட்டது.

Next Story