மனைவி கோபித்து கொண்டு தாயார் வீட்டுக்கு சென்றதால் - பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி கோபித்து கொண்டு தாயார் வீட்டுக்கு சென்றதால் - பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Feb 2020 10:15 PM GMT (Updated: 2020-02-21T05:12:29+05:30)

பல்லடத்தில் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்றதால் தனியார் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பல்லடம்,

பல்லடம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது33). கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சரண்யா (30) என்ற மனைவியும், அனன்யா ( 6) என்ற மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் பாலாஜி குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மனைவி சரண்யா, கணவர் பாலாஜியிடம் குடிப்பழக்கம் நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் கணவரிடம் கோபித்து கொண்டு சரண்யா பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டியில் தனது தாய் வீட்டுக்கு மகளுடன் சென்றுவிட்டார். மனைவி மற்றும் மகள் சென்றதை நினைத்து வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்தி விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில் பாலாஜி குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரான பெஞ்சமின் என்பவர் வாடகை கேட்டு பாலாஜிக்கு போன் செய்துள்ளார். ஆனால் பாலாஜி போன் எடுக்கவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை பாலாஜியின் வீட்டிற்கு பெஞ்சமின் வந்துள்ளார். அப்போது பாலாஜி வீ்ட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வீட்டினுள் தொலைக்காட்சி பெட்டி ஓடிக்கொண்டிருந்தது. இதையடுத்து வீட்டின் கதவைத் பெஞ்சமின் தட்டினார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்காததால் ஜன்னல் வழியே வீட்டிற்குள் எட்டிப் பார்த்துள்ளார்.அங்கு தூக்கில் பாலாஜி தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெஞ்சமின் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய பாலாஜியை மீட்டனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மனைவி சரண்யா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story