தமிழ் மொழி விஞ்ஞான அறிவு பெற வேண்டும் நூல் வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேச்சு


தமிழ் மொழி விஞ்ஞான அறிவு பெற வேண்டும் நூல் வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேச்சு
x
தினத்தந்தி 21 Feb 2020 5:18 AM IST (Updated: 21 Feb 2020 5:18 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்மொழி விஞ்ஞான அறிவு பெற வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சுய்ப்ரேன் வீதியில் உள்ள கூட்டுறவுச் சங்க அரங்கில் ‘உலகத் தமிழ்க் கவிதை ஓராயிரம்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவிற்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை தாங்கினார். மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சம்பத் வரவேற்று பேசினார். நூலை சபாநாயகர் சிவகொழுந்து வெளியிட்டார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜமரியாதை

தமிழ் மொழி தோன்றிய நாளில் இருந்து இன்று வரை நிகழ்ந்திராத ஒரு அபூர்வ நிகழ்வு தற்போது புதுச்சேரி மண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆயிரம் கவிஞர்களின் கவிதை தொகுப்பு என்பது தமிழ் வரலாற்றுக்கு புதிது. இந்தநூல் 7 ஆண்டுகள் காலதாமதமாக தற்போது வெளிவந்துள்ளது என்று கூறினர். மிகப்பெரிய சாதனைகள் எல்லாம் சற்று தாமதமாக தான் வெளிவரும். ஒரு தாய் தன் கருவில் இருந்து குழந்தையை பெற்றெடுக்க 10 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

அது போல தான் உலகத் தமிழ்க்கவிதை என்ற நூல் 7 ஆண்டுகள் தாமதமாக வெளிவந்துள்ளது.

இந்த நூல் வெளியிடும் இடம் புதுச்சேரி. புரட்சி கவிஞர் பாரதியார் வாழ்ந்த மண். பாரதிதாசன் பிறந்த மண். பாரதி இந்த மண்ணில் வாழ்ந்தான் என்பதைவிட, இங்கு இறந்தான் என்றிருந்தால் பெருமதிப்பு பெற்றிருப்பான். புதுவையில் இறந்த ஒரு படைப்பாளிக்கு மாநில அரசு ராஜமரியாதை கொடுத்துள்ளது.

3 ஆயிரம் ஆண்டுகளாக...

ஒரு கவிஞன் எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம். ஆனால் புதுச்சேரியில் தான் இறக்க வேண்டும். அவ்வளவு பெரிய மரியாதை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு தமிழ் கவிஞர்கள் சார்பில் நன்றியை தெரிவிக்கிறேன்.

வானத்தில் இருந்து வரும் மழைத்துளி எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பூமியில் வந்து விழுகிறது. அதுபோல் கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் மொழியில் மட்டும் தான் கவிதைகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. தமிழ் சமுதாயத்தில் மட்டும் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஆயிரம் கவிஞன் கிடைப்பான். வேறு எந்த மொழியிலும் இது போல் கவிஞர்கள் கிடைக்கமாட்டார்கள். தமிழ்மொழியின் சிறப்பை வேறு எந்த மொழியிலும் பார்க்க முடியாது. பிறப்பு முதல் இறப்பு வரை கவிதையாகவும், கற்பனையாகவும், மொழியாகவும் வாழக்கூடிய வாழ்வு தமிழனுக்கு என்று வகுக்கப்பட்ட வரம்.

சபதம் ஏற்போம்

தமிழுக்கென சில திட்டங்களையும், கொள்கைகளையும் வகுக்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம். உலக மயமாதல் என்ற பெரும் பூதம் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் புகுந்து உள்ளூர் கலாசாரத்தை, பண்பாட்டை தின்கிறது. கடைசியாக தற்போது மொழியின் மீது வாய் வைக்கிறது. மொழியை விழுங்கி விட்டு தன்னுடைய சுவடுகளை பதிப்பதற்கு முயற்சிக்கிறது.

இந்தியாவில் உள்ள மொழிகளுக்கு இந்த ஆபத்து வரலாம். வரக்கூடும். எந்த மொழிக்கும் வரக்கூடாது என்பது நமது பொதுவான எண்ணம். தமிழ்மொழிக்கு வரக்கூடாது என்பது தான் என்னுடைய தனிப்பட்ட எண்ணம். உலக மயமாதல் என்னும் பூதத்தை விழுங்கும் சக்தியை தாய்மொழிக்கு நாம் அனைவரும் தர வேண்டும். இதற்காக தமிழர்கள் அனைவரும் சபதம் ஏற்போம்.

விஞ்ஞான அறிவு

தமிழ்மொழி களப்பிரர்கள், ஆங்கிலம், மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை கடந்து வந்துள்ளது. இன்று தமிழ்மொழி தன்னைத்தானே கடக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது. தமிழ் மொழிக்குள் எல்லாம் அடங்கி விட்டது என்று பூட்டு போட்டு விடாதீர்கள்.

இதில் ஆராய்ச்சி, விஞ்ஞானம், தத்துவம் போன்றவை இல்லை. தமிழ் மொழியில் கண்டுபிடிப்புகள் இ்ல்லை. யாரோ கண்டுபிடிக்கிறார்கள். அதற்கு நாம் பெயரை தான் கண்டுபிடிக்கிறோம். சில நேரங்களில் பெயரை கண்டுபிடிப்பதே பெரிய போராட்டமாக உள்ளது. மொழிபெயர்ப்புகளில் சில நேரங்களில் பெரிய சிக்கல்கள் ஏற்படுகிறது. நம் வாழ்க்கை மொழிபெயர்ப்பில் முடிந்து விடக்கூடாது. தமிழ் மொழி விஞ்ஞான அறிவு பெற வேண்டும். இது தான் என்னுடைய வேண்டுகோள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரின்நாடாளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன முனைவர் ரவிசங்கர் மற்றும் தமிழ் அறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story