முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 115 அடியாக சரிவு - குடிநீர் தட்டுப்பாடு அபாயம்


முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 115 அடியாக சரிவு - குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
x
தினத்தந்தி 21 Feb 2020 3:45 AM IST (Updated: 21 Feb 2020 5:27 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.80 அடியாக சரிந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

தேனி,

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த உயரம் 152 அடி ஆகும். இதில், 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை. இதனால், அணையின் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. வடகிழக்கு பருவமழை கைவிட்டதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் 2-ம் போக நெல் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு இடங்களிலும் விவசாயிகள் 2-ம் போக நெல் சாகுபடி பணியில் ஈடுபடாமல், தங்களின் நிலங்களை தரிசாக விட்டுள்ளனர்.

அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. நீர்மட்டம் வேகமாக குறைவதை தொடர்ந்து அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. இதனால், மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு, இரைச்சல் பாலம் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. சில நாட்களாக அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நேற்று அணையின் நீர்மட்டம் 115.80 அடியாக சரிந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 100 கன அடியாக உள்ளது. அதே அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 1,871 மில்லியன் கன அடியாக இருந்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாத கடைசியில் அணையின் நீர்மட்டம் 115.70 அடியாக இருந்தது. எனவே முல்லைப்பெரியாற்றில் உறை கிணறுகள் அமைத்து குடிநீர் பெறும் பகுதிகளில் கடந்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதேபோல், இந்த ஆண்டும் நீர்மட்டம் சரிந்து வருவதால், கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக கோடை காலத்துக்கு நிகராக வெயில் வாட்டி வதைக்கிறது.

அணையின் நீர்மட்டம் சரிந்து வருவது ஒருபுறம் இருக்க அணையில் இருந்து ஆற்றில் குடிநீருக்காக திறந்து விடப்படும் தண்ணீர் மின்மோட்டார்கள் மற்றும் டீசலில் இயங்கும் மோட்டார்கள் மூலம் திருட்டுத்தனமாக எடுக்கப்படுகிறது.

இவ்வாறு எடுக்கப்படும் தண்ணீரை சிலர் விவசாய பயன்பாட்டுக்கும், சிலர் வணிக பயன்பாட்டுக்கும் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே, ஆற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பதை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story