விக்கிரவாண்டி அருகே, மலையில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்ததில் தொழிலாளி சாவு


விக்கிரவாண்டி அருகே, மலையில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்ததில் தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 20 Feb 2020 10:15 PM GMT (Updated: 21 Feb 2020 12:27 AM GMT)

விக்கிரவாண்டி அருகே மலையில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக செத்தார்.

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி தாலுகா முட்டத்தூரை அடுத்த செ.புதூர் கிராமத்தில் தனியார் கல் குவாரி உள்ளது. இந்த குவாரியை மதுரையை சேர்ந்த அன்புச்செல்வன் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை 11.30 மணியளவில் இந்த குவாரியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாறைகளை வெடி வைத்து உடைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக முட்டத்தூரை சேர்ந்த ராமகிரு‌‌ஷ்ணன் (45) என்ற தொழிலாளி, கம்பரசர் உதவியுடன் ஒரு பெரிய பாறையில் துளைபோட்டார்.

அப்போது அதிக அதிர்வு காரணமாக மலையின் மேல்பகுதியில் இருந்த பாறாங்கற்கள் உருண்டு பணி செய்து கொண்டிருந்த ராமகிரு‌‌ஷ்ணன் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்த விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் (கனிமவளம்) லட்சுமிப்பிரியா, கண்காணிப்பாளர் நாராயணமூர்த்தி, விக்கிரவாண்டி தாசில்தார் பார்த்திபன், மண்டல துணை தாசில்தார் முருகதாஸ், விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, சப்- இன்ஸ்பெக்டர் ஜெயபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது இறந்துபோன ராமகிரு‌‌ஷ்ணனின் குடும்பத்தினருக்கு அரசு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கிராம மக்கள் மற்றும் ராமகிரு‌‌ஷ்ணனின் உறவினர்கள் முறையிட்டனர். அதற்கு ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் கூறினர்.

பின்னர் ராமகிரு‌‌ஷ்ணனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு விஜயா என்ற மனைவியும், ராஜேஸ்வரி வைத்தீஸ்வரி ஆகிய 2 மகள்களும், பாலசுப்பிரமணியன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்து தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story