வளர்ச்சி திட்டங்களின் செயல்பாடுகளை கலெக்டர் சாந்தா ஆய்வு
பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட கல்பாடி ஊராட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்,
கல்பாடி ஊராட்சியில் செயல்பட்டுவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மருத்துவமனைக்கு நாள்தோறும் வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறித்தும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மேலும் சிகிச்சைக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறையின் சார்பில் கல்பாடி ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திலும், கல்பாடி ரேஷன் கடையிலும் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, கலெக்டர் சாந்தா கல்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்தும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்தும் மற்றும் வருகைப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கைக்கேற்ப உணவுப்பொருட்கள் தயார் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக மத்திய-மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை எவ்வித தொய்வுமின்றி சிறப்பான முறையில் செயல்படுத்தி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
ஆய்வின் போது துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் கீதாராணி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கங்காதேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி, தாசில்தார் பாரதிவளவன், கல்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தெய்வநாயகி உள்ளிட்டடோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story