டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில் சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் எர்ணாவூர் நாராயணன் பேச்சு
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில் சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி,
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில் சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று எர்ணாவூர் நாராயணன் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தேவர்புரம் சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அற்புதராஜ், பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எர்ணாவூர் நாராயணன் பேசும்போது, ‘‘திருச்செந்தூரில் இன்று (சனிக்கிழமை) நடக்க உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் புகழுக்கு பெருமை சேர்க்க வேண்டும். அதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் நமது பங்கு அதிகளவில் இருக்க வேண்டும்‘‘ என்றார்.
பின்னர் எர்ணாவூர் நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
மணிமண்டபம் திறப்பு விழா
திருச்செந்தூரில் நடைபெறும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழாவில் கலந்து கொள்வது குறித்தும், தூத்துக்குடியில் அடுத்த மாதம் (மார்ச்) 8–ந்தேதி நடைபெற உள்ள பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா, உலக மகளிர் தின விழா, கட்சியின் 5–ம் ஆண்டு தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
காவிரி டெல்டா பகுதியை தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்து உள்ளது. அதற்கு எங்கள் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இருந்தபோதும் அந்த பகுதிகளில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு இதுவரை கைவிடவில்லை. இதனை அரசு கருத்தில் கொண்டு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முறைகேடு
தமிழகத்தில் 90 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். இந்த நிலையில் குரூப்–4 தேர்வில் பெரிய முறைகேடு நடந்து உள்ளது. பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் தரமான கல்வி வழங்கப்பட்டு, தகுதியான நபர்கள் அரசு வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். தற்போது முதல் மற்றும் 2–ம் நிலையில் படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும் என்று படிக்கிறார்கள். ஆனால் சிலர் பணம் கொடுத்து முறைகேடாக அரசு வேலை பெற்றுள்ளனர். நீட் தேர்விலும் ஆள்மாறாட்டம் நடந்து உள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் மிக மோசமான நிலையில் உள்ளது. இதற்கு கண்டிப்பாக தீர்வு காணப்பட வேண்டும். தமிழகத்தில் ரூ.4 லட்சத்து 52 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இலவசங்களை அதிகமாக கொடுப்பதால்தான் கடன் அதிகரித்து உள்ளதாக கூறுகிறார்கள். இது வேதனை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story