மாணவர்கள் தேர்ச்சியில் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் அவசியம்; முதன்மை கல்வி அதிகாரி பேச்சு


மாணவர்கள் தேர்ச்சியில் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் அவசியம்; முதன்மை கல்வி அதிகாரி பேச்சு
x
தினத்தந்தி 21 Feb 2020 10:00 PM GMT (Updated: 21 Feb 2020 4:06 PM GMT)

மாணவர்கள் தேர்ச்சியில் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் அவசியம் இருக்க வேண்டும் என பள்ளி விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி பேசினார்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம் நல்லூரில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் விளையாட்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் இலக்கிய மன்ற விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பிச்சைவேல் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் லாசர் ஆண்டறிக்கை வாசித்தார். விளையாட்டு விழாவை முன்னாள் எம்.எல்.ஏ. கவிதைப்பித்தன் தொடங்கி வைத்தார்.

விழாவில் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பழனியாண்டி, பெருமாநாடு பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி கலந்து கொண்டு, இலக்கிய மன்ற போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், எதிர்காலத்தில் இந்த பள்ளி இன்னும் சிறப்பு மிக்க பள்ளியாக மாறும். இப்பள்ளி இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சியை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆசிரியர்களால் மட்டுமே மாணவர்களை தேர்ச்சி பெற வைத்துவிட முடியாது. பெற்றோர்களின் ஒத்துழைப்பும் அவசியம் தேவை. மாணவர்கள் படிக்கும்போது பெற்றோர்கள் பக்கத்தில் அமர்ந்து இருந்தாலே போதுமானது என்றார்.

விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் வெங்கடே‌‌ஷ் நன்றி கூறினார்.

Next Story