கைவினை பொருட்கள் உற்பத்தியை புதுச்சேரி அதிகாரிகள் பார்வையிட்டனர்


கைவினை பொருட்கள் உற்பத்தியை புதுச்சேரி அதிகாரிகள் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 22 Feb 2020 4:00 AM IST (Updated: 21 Feb 2020 9:56 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர்குழுக்கள் தயாரிக்கும் கைவினை பொருட்கள் உற்பத்தியை புதுச்சேரி அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர்.

வேலூர், 

மத்திய அரசு திட்டமான தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர்திட்ட அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடன் பெற்று கொடுக்கப்படுகிறது. இதன்மூலம் மகளிர்குழுவினர் பல்வேறு தொழில்களை செய்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறார்கள்.

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் 60 கூட்டுக்குழுக்கள் இயங்கிவருகிறது. ஒரு குழுவுக்கு ரூ.9 லட்சம்வரை வங்கிகள் மூலம் கடன்பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. மகளிர் கூட்டுக்குழுவை சேர்ந்தவர்கள் மண்பாண்டம், பொம்மைகள், தையல் உள்பட பல்வேறு கைவினை பொருட்களை உற்பத்தி செய்து வருகிறார்கள். இவர்கள் உற்பத்திசெய்யும் கைவினை பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. புதுச்சேரியிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் குறிப்பாக வேலூர் மாநகராட்சி பகுதிகளில் இயங்கிவரும் மகளிர் கூட்டமைப்பு குழுவினர் கைவினை பொருட்கள் உற்பத்தியில் சிறந்து விளங்குகின்றனர். அவர்கள் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்கள். அதைத்தொடர்ந்து அதேபோன்று புதுச்சேரி மகளிர்குழுக்கள் சார்பில் உற்பத்தி செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி புதுச்சேரி நகராட்சி நிர்வாக அலுவலக உதவிதிட்ட அலுவலர் கந்தசாமி, உழவர்கரை நகராட்சி கமிஷனர் கருணாநிதி, சமுதாய அமைப்பாளர்கள் நாகசுதா, ஜான் உள்பட 6 பேர் கொண்ட குழுவினர் வேலூருக்கு வந்துள்ளனர்.

அவர்கள் நேற்று அரியூரில் இயங்கிவரும் மகளிர் கூட்டமைப்பினர் கைவினை பொருட்கள் உற்பத்தி செய்வதை நேரில் பார்த்து, அதை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து கேட்டறிந்தனர். மேலும் மகளிர் கூட்டமைப்பினரை புதுச்சேரிக்கு வந்து தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மகளிர்குழுவினருக்கும் செயல்விளக்கம்செய்து காண்பிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அப்போது வேலூர் மகளிர் உதவித்திட்ட அலுவலர் ஜெயகாந்தன், சமுதாய அமைப்பாளர்கள் துரை, திருச்செல்வி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story