‘பசுமை வீடுகள் கட்ட அள்ளுவதாக கூறி மணலை கொள்ளையடிக்கிறார்கள்’ - குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு


‘பசுமை வீடுகள் கட்ட அள்ளுவதாக கூறி மணலை கொள்ளையடிக்கிறார்கள்’ - குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 Feb 2020 10:30 PM GMT (Updated: 21 Feb 2020 5:46 PM GMT)

பசுமை வீடுக்காக அள்ளுகிறோம் என்ற பெயரில் மணலை கொள்ளையடிக்கின்றனர் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-

பொதுமக்கள், விவசாயிகள் கொடுக்கும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால்தான் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் தீக்குளிப்பு சம்பவங்கள் தொடருகிறது. எனவே பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அவற்றிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற இலவசமாகவோ அல்லது மானியத்திலோ வலைகள் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை இன்னும் மேற்கொண்டு சில நாட்கள் தொடர்ந்து திறந்துவிட அங்குள்ள கலெக்டரிடம் பேசி உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் கோடை காலத்தில் நமது மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. தற்போது கரும்பு பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் அதிகமாக உள்ளது. இதுபற்றி திண்டிவனம் வேளாண் அறிவியல் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கடந்த 2018-19-ம் ஆண்டில் கரும்புகளை அரவைக்கு அனுப்பிய வகையில் விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத்தொகை இன்னும் வழங்கப்படாமல் பாக்கி உள்ளது. அதை உடனே பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை ஏரிகளில் குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இதில் எந்தவித பாரபட்சமும் காட்டாமல் பணியை செய்ய வேண்டும்.

தோட்டக்கலைத்துறையில் உள்ள திட்டங்களை பற்றி எந்தவொரு தகவலையும் விவசாயிகளுக்கு அதிகாரிகள் தெரிவிப்பது கிடையாது. காரணம் கேட்டால் துணை இயக்குனர் இல்லை என்கிறார்கள். இதனால் தோட்டக்கலைத்துறை நமது மாவட்டத்தில் செயலிழந்துள்ளது. உடனடியாக தோட்டக்கலைத்துறை துணை இயக்குனரை நியமிக்க வேண்டும்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பல முறைகேடுகள் நடக்கிறது. குறிப்பாக விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. ஆகவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க வேண்டும். அதேபோல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும், சில சமயங்களில் 5 நாட்கள், ஒரு வாரம் வரை தாமதம் செய்கின்றனர்.

விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் சரிவர வழங்குவதில்லை. இதுபற்றி பலமுறை மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் பேசியும் உரிய பதில் இல்லை. பசுமை வீடு, அரசு தொகுப்பு வீடு கட்டும் திட்டத்திற்காக மணல் எடுக்கிறோம் என்ற பெயரில் மணலை கொள்ளையடிக்கின்றனர். இது அதிகாரிகளின் துணையோடு நடக்கிறது. பயனாளிக்கு ஒரு லோடு மணலை மட்டும் கொட்டிவிட்டு 2 லோடு மணல் திருட்டுத்தனமாக விற்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட பயனாளிகளையே மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். அதே நேரத்தில் நமது மாவட்டத்தில் மணல் குவாரி தொடங்கி முறையாக மணல் விற்பனை செய்ய வேண்டும்.

விவசாய பயன்பாட்டுக்கு சொந்த நிலத்தில் உபரி மண் எடுக்க அனுமதி கொடுப்பதில் அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனர். உடனுக்குடன் அனுமதி வழங்க வேண்டும். வருவாய்த்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. அரசு உதவித்தொகை பெறுவதற்கு அதிகாரிகளிடம் பணம் கொடுத்தால் மட்டுமே எந்தவொரு வேலை நடக்கிறது. குறிப்பாக முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவு வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் சவுக்கு உற்பத்தி அதிகமாக உள்ளது. எனவே காகித ஆலை அமைக்க வேண்டும் என்பது இங்குள்ள விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. அதற்கு தேவையான இடம் திண்டிவனம் சாரம் பகுதியில் உள்ளது. அங்கு காகித தொழிற்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

செ.புதூரில் இயங்கி வரும் கல் குவாரியில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை வெடிக்க செய்து பாறைகளை உடைக்கின்றனர். இதனால் அருகில் வசிக்கும் வீடுகளில் அதிர்வுகள் ஏற்படுகிறது. குடியிருக்கவே மிகவும் அச்சமாக உள்ளது. நேற்று முன்தினம் இந்த குவாரியில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதனை கேட்டறிந்த கலெக்டர், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என்று உறுதியளித்தார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், வேளாண் இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார், வேளாண் அலுவலர் சுரே‌‌ஷ், கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் பாலகிரு‌‌ஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story