மகா சிவராத்திரி விழா சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை


மகா சிவராத்திரி விழா சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை
x
தினத்தந்தி 22 Feb 2020 10:00 PM GMT (Updated: 21 Feb 2020 7:35 PM GMT)

சிவராத்திரி விழாவையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த அகோர வீரபத்திரர் சிவன் கோவில் உள்ளது. அங்கு மகா சிவராத்திரியையொட்டி சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதேபோல் காஞ்சீபுரம் கைலாசநாதர் கோவிலிலும் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமத்தில் பழமை வாய்ந்த ஆத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரியையொட்டி சிவபெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், விபூதி, கதம்பப்பொடி, பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், கரும்பு சாறு ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

பின்னர் மூலவர் சிலை அலங்கரிக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தி வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் மலை மீதுள்ள சிவன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஆத்தூரில் உள்ள தர்மசம்வர்த்தினி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவிலில் 6 கால பூஜைகள் நடைபெற்றன.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை வழிபட்டனர்.

இது போல திருவடி சூலம், விஞ்சியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Next Story