மேட்டு இருங்களூரில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 18 பேர் காயம்


மேட்டு இருங்களூரில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 18 பேர் காயம்
x
தினத்தந்தி 22 Feb 2020 3:30 AM IST (Updated: 22 Feb 2020 2:00 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 18 பேர் காயம் அடைந்தன.

சமயபுரம்,

சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று அதிகாலையிலேயே திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 650 காளைகளை அழைத்துக்கொண்டு காளை உரிமையாளர்களும், 350 மாடுபிடிவீரர்களும் வந்தனர்.

மண்ணச்சநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதேபோல் போட்டியில் பங்கேற்ற காளைகளை லால்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் சுகுமார் தலைமையிலான குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டை லால்குடி ஆர்.டி.ஓ. ராமன், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஸ்ரீதர், இருங்களூர் ஊராட்சி தலைவர் வின்சென்ட் ஆகியோர் தொடங்கிவைத்தனர். மண்ணச்சநல்லூர் தாசில்தார் முருகேசன் மற்றும் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள வந்திருந்த வீரர்கள் ஒவ்வொரு குழுவாக பிரித்து காளைகளை அடக்க மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரத்துடன் மடக்கிப்பிடித்தனர்.

சில காளைகள் வீரர்களின் பிடியில் அகப்படாமல் தப்பி சென்றன. இதில் காளையை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டின் போது, காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் காயம் அடைந்தனர். இதில் கோமா குடியைச்சேர்ந்த ரஞ்சித் (வயது 23), மாட்டின் உரிமையாளரான தச்சங்குறிச்சியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் (19) ஆகியோர் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த விஜயேந்திரன் (22), திருச்சி லால்குடியை சேர்ந்த நந்தகுமார், நடு இருங்களூரைச்சேர்ந்த நெல்சன் (20), மேட்டு இருங்களூரைச் சேர்ந்த பீட்டர் (36), நெய்க்குப்பையை சேர்ந்த தங்கதுரை (25) சிவகங்கையை சேர்ந்த ராகவன் (29), நாமக்கல்லை சேர்ந்த இளவரசன் (22) ஆகியோர் உள்பட 16 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

ஜல்லிக்கட்டை காண்பதற்காக திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து இருந்தனர். அவர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது வாடிவாசலின் இருபுறங்களிலும் மற்றும் அருகே நிறுத்தியிருந்த டிராக்டர்கள் மீதும் ஏறி நின்றுகொண்டு ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர். சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story