பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு: சென்னை வக்கீலை கடத்திய 4 பேர் கைது - கார் பறிமுதல்


பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு: சென்னை வக்கீலை கடத்திய 4 பேர் கைது - கார் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Feb 2020 3:45 AM IST (Updated: 22 Feb 2020 2:05 AM IST)
t-max-icont-min-icon

தொட்டியம் அருகே பணம் கொடுக்கல்- வாங்கல் தகராறில் சென்னையை சேர்ந்த வக்கீலை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொட்டியம்,

சென்னை பெரம்பூர் சுப்பிரமணியபுரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் சதீஸ்குமார் (வயது 35). இவர் சென்னை ஐகோர்ட்டில் பயிற்சி வக்கீலாக உள்ளார். இவருக்கும், திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அலகரை காவேரிநகரை சேர்ந்த பிரகா‌‌ஷ்(27) என்பவருக்கும் பணம் கொடுக்கல்- வாங்கல் தகராறு இருந்து வந்தது.

இந்தநிலையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த சதீஸ்குமார், தன்னை ஒரு கும்பல் கடத்தி வந்து 5 பவுன் நகையை பறித்துக்கொண்டதாக நேற்று முன்தினம் கூறினார். அதன் பேரில், தொட்டியம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் சதீஸ்குமாரை மீட்டனர்.

மேலும் இதுகுறித்து சதீஸ் குமார் கொடுத்த புகாரின் பேரில், தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சதீஸ்குமாரை சென்னையில் இருந்து காரில் கடத்தி வந்தது, அலகரை காவேரிநகரை சேர்ந்த பிரகா‌‌ஷ், அதே ஊரை சேர்ந்த இளவரசன்(32), அரியணாம்பேட்டை கருணாகரன்(29), கார் டிரைவர் மணமேடு பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்த அருள்குமார்(27) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

Next Story