கஞ்சா விற்றதை தட்டிக்கேட்டதால் முன்விரோதம்: தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை
காசிமேட்டில் கஞ்சா விற்றதை தட்டிக்கேட்ட தி.மு.க. பிரமுகர் 4 பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்,
காசிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் சொரி குப்பன் (வயது 60). மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். தி.மு.க. பிரமுகரான இவர், நேற்று மாலை காசிமேடு கடற்கரையில் நண்பர்களுடன் சேர்ந்து சீட்டு விளையாடி கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இது குறித்து மீனவர்கள் காசிமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியாகி கிடந்த சொரி குப்பன் உடலை கைப்பற்றி சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த கொடூர கொலை குறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த அட்டு ரமேஷ் (44), சம்பத் (25), ராகேஷ்(18), சந்தோஷ்(19) ஆகியோர் சொரிகுப்பனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.
கைது
இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், வீட்டில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான அட்டு ரமேசை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அதன் பின்னர், போலீசார் அவரிடம் விசாரித்தபோது அட்டு ரமேசும் அவரது கூட்டாளிகளும் அப்பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்று வந்ததாகவும், அதனை சொரி குப்பன் தட்டிக்கேட்டதால் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில், ரமேஷின் மனைவியை சொரிகுப்பன் தவறான உறவுக்கு அழைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த அட்டு ரமேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சொரி குப்பனை வெட்டிகொன்றதும் தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story