குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் முஸ்லிம்கள் போராட்டம் 8-வது நாளாக நீடிப்பு


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் முஸ்லிம்கள் போராட்டம் 8-வது நாளாக நீடிப்பு
x
தினத்தந்தி 21 Feb 2020 10:00 PM GMT (Updated: 21 Feb 2020 9:44 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் நேற்று முஸ்லிம்கள் 8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

குடியுரிமை திருத்த சட்டம்(சி.ஏ.ஏ.), தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி.), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு(என்.பி.ஆர்.) ஆகியவற்றுக்கு எதிராக டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் முஸ்லிம்கள் பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது போன்று சென்னை வண்ணாரப்பேட்டையிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த 14-ந்தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்று 8-வது நாளாக நீடித்தது. இதையொட்டி ‘சென்னை ஷாஹின் பாக் போராட்டம் 8-வது நாள்’ என்ற வாசகம் அடங்கிய பலகை போராட்டகளத்தில் வைக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் போராட்டக்களத்திலேயே தொழுகை நடத்தினர்.

மாணவர்கள் ஆதரவு

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்., ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதே வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடரில் அவர்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. எனவே போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றனர்.

“எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம். தொடர்ந்து போராடுவோம். கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று அப்பகுதி முஸ்லிம் மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இவர்களுக்கு நேற்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தினேஷ் தலைமையில் மாணவர்கள் நேரில் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

Next Story