சென்னை கோவில்களில் சிவராத்திரி விழா கோலாகலம் விடிய, விடிய பக்தர்கள் தரிசனம்
சென்னையில் உள்ள சிவாலயங்களில் சிவராத்திரி விழா களைகட்டியது. ஏராளமான பக்தர்கள் விடிய, விடிய தரிசனம் செய்தனர்.
சென்னை,
சிவபெருமானுக்கு உரிய விரதங்களில் மகா சிவராத்திரி விரதம் மிகவும் சிறப்பானது. இந்த புண்ணிய காலத்தில் சிவனின் நாமம் கூறி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள கோவில்களில் சிவராத்திரி விழா நேற்று இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மயிலாப்பூர் கபாலிசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில், வடபழனி முருகன் கோவில், பாரிமுனை கச்சாலீசுவரர் கோவில், பாடி திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோவில் புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில் உள்பட மாநகரில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடந்தது.
பக்தர்கள் தரிசனம்
இதனையொட்டி பல்வேறு கோவில்கள் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சிவாலயங்களில் நேற்று இரவு முழுவதும் நான்கு காலங்களிலும் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இரவு, 8.30 மணி, 11 மணி, அதிகாலை 1 மணி மற்றும் 3 மணிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. ஒவ்வொரு கால அபிஷேக வேளையிலும் பஜனை நடந்தது.
சிவாராத்திரியையொட்டி மேற்கண்ட கோவில்களில் பக்தர்கள் விடிய, விடிய பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதங்களும் வினியோகம் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story