ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்தால் தான் வேளாண்மை பாதுகாக்கப்படும் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்தால் தான் வேளாண்மை பாதுகாக்கப்படும் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Feb 2020 10:28 PM GMT (Updated: 21 Feb 2020 10:28 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்தால் தான் வேளாண்மை பாதுகாக்கப்படும் என கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

ராயமுண்டான்பட்டி வெ.ஜீவக்குமார்: ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்தால் தான் வேளாண்மை பாதுகாக்கப்படும். பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டல மசோதாவை நிறைவேற்றி தமிழகஅரசு இதற்காக அமைத்துள்ள குழுவில் விவசாய சங்க பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும். நெல் மகசூல் அதிகமாக இருந்தும் நெல் கொள்முதல் நிலையங்கள் கொள்முதலுக்கு உகந்ததாக செயல்படவில்லை. நெல் கொள்முதல், பணப்பட்டுவாடா திருப்திகரமாக இல்லை.

சுவாமிமலை விமல்நாதன்: தமிழகஅரசின் விலையில்லா அரிசி திட்டத்தில் மாற்றம் செய்து 1 கிலோ அரிசி ரூ.2 என நிர்ணயம் செய்து அதன்மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும்.

மருத்துவக்குடி முருகேசன்: நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 வரை கட்டாயம் வசூல் செய்கின்றனர். மூட்டைகளை எடைபோடும்போது நெல்லை பணியாளர்கள் அள்ளுகின்றனர். இவற்றை தடுக்க வேண்டும்.

கலெக்டர்: கொள்முதல் தொடர்பாக வந்த புகார் அடிப்படையில் நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பறக்கும்படை மூலம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தஞ்சை கண்ணன்: அறுவடை எந்திரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குளம், ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை இப்போதே தொடங்க வேண்டும். பேராவூரணி விவசாயி தற்கொலைக்கு காரணமான நிதிநிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ைஹட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்தால் தான் வேளாண்மை பாதுகாக்கப்படும்.

தஞ்சை செந்தில்குமார்: தஞ்சை மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களிலேயே 1 லட்சம் டன் நெல் தேக்கம் அடைந்துள்ளது. கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொட்டி வைக்க இடம் இல்லாததால் வயல்களில் நெல்லை விவசாயிகள் கொட்டி வைத்துள்ளனர். மழை பெய்தால் நெல் வீணாகிவிடும். எனவே கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும்.

கீழக்கோட்டை தங்கவேல்: ஆம்பலாப்பட்டு தெற்கு மற்றும் வடக்கு ஆகிய 2 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகிறது. இங்கு நெல்லை கொண்டு வந்து கொட்டிவிட்டு பல நாட்களாக விவசாயிகள் காத்து கிடக்கும் நிலை உள்ளது. விவசாயிகளிடம் பணம் வாங்கி கொண்டு தான் ரசீது கொடுக்கப்படுகிறது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: கரும்புக்கான நிலுவைத்தொகை ரூ.30 கோடியை வழங்காததால் விவசாயிகள் கரும்புசாகுபடி செய்ய ஆர்வம் காட்டாததால் சாகுபடி முற்றிலும் குறைந்துவிட்டது. ஆலையை மூடும் நிலை உள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு கடன் கொடுக்க எந்த வங்கிகளும் முன்வருவதில்லை.

பொன்னவராயன்கோட்டை வீரசேனன்: கல்லணை கால்வாயை புனரமைக்க ரூ.2,300 கோடி திட்டமதிப்பீடு செய்யப்பட்டு இதற்கான நிதியை ஆசிய வளர்ச்சி வங்கி தருவதாக அரசு அறிவித்துள்ளது. இந்த பணி 3 கட்டங்களாக செயல்படுத்தப்படும் என கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே ஒரே கட்டமாக இந்த பணியை முடிக்க வேண்டும். அறுவடை எந்திரங்கள் மூலம் அறுவடை செய்ய மணிக்கு ரூ.3 ஆயிரம் வாடகை வசூலிக்கப்படுகிறது. தட்டுப்பாடு இன்றி அறுவடை எந்திரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அம்மையகரம் ரவிச்சந்தர்: பிரதமரின் உழவர் கடன் அட்டை வழங்கும் திட்டம் அறிவித்து 1 சதவீத விவசாயிகளுக்கு கூட அட்டை வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்க வங்கியாளர்கள், விவசாயிகள், அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்த வேண்டும்.

மேற்கண்ட விவசாயிகள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

Next Story