தேனி அருகே மக்கள் எதிர்ப்பு: பாதுகாப்பு கேட்ட ‘டிக்-டாக்’ சகோதரிகளை எச்சரித்து அனுப்பிய போலீசார்
தேனி அருகே மக்கள் எதிர்ப்பு தெரிவித்த ‘டிக்-டாக்’ சகோதரிகள் பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
தேனி,
தேனி அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த சகோதரிகள் இருவர் ‘டிக்-டாக்’ செயலியில் தொடர்ந்து வீடியோக்கள் பதிவேற்றி வந்தனர். சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் அவர்கள் வீடியோக்களை வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. கிளு,கிளுப்பான பாடல்களுக்கு அவர்கள் நடனமாடி வீடியோக்கள் பதிவு செய்தனர். இது பலரையும் முகம் சுழிக்க செய்தது.
இதையடுத்து வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை திட்டியும், நாகலாபுரம் கிராம மக்களை அவதூறாக பேசியும் வீடியோ வெளியிட்டதாக கூறப்பட்டது. இதனால், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவதூறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த வாரம் புகார் செய்தனர். மேலும், அவர்கள் அந்த இரு பெண்களாலும் தங்கள் ஊருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களை ஊரில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் போலீசாரிடம் வாய்மொழியாக புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில், அவதூறு பேசிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட ‘டிக்-டாக்’ சகோதரிகளில் ஒருவர், ‘டிக்-டாக்’ செயலியில் வீடியோக்களுக்கு விமர்சனம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் வேறு ஒரு நபரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும், இதற்கு கூலிப்படையை தயார் செய்ததாகவும் ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது பழனிசெட்டிபட்டி போலீசார் கவனத்துக்கு சென்றது.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவில் அக்கா, தங்கை இருவரும் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். சமூக வலைத்தளங்களில் அநாகரிகமாக நடந்து கொள்ளக்கூடாது என்றும், கூலிப்படை ஏவுதல் போன்ற திட்டம் தீட்டுவதாக தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘கூலிப்படை ஏவ திட்டம் தீட்டியது, கொலை மிரட்டல் தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை. ஊரில் உள்ள மக்கள் சிலரிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளிக்க வந்தனர். அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்துள்ளோம். தேவைப்பட்டால் இந்த பிரச்சினையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
Related Tags :
Next Story