சிறப்பு குறைதீர்க்கும் முகாம்களில், பல்வேறு உதவிகள் கேட்டு 20 ஆயிரம் பேர் மனு - கலெக்டர் தகவல்
சிறப்பு குறைதீர்க்கும் முகாம்களில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 20 ஆயிரம் பேர் மனு கொடுத்துள்ளதாக கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல்,
மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வதற்காகவே பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், அம்மா திட்ட முகாம் ஆகியவைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கூட்டங்களில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு, சாதி, இருப்பிடம், வருமானம் உள்ளிட்டவற்றுக்கான சான்றிதழ்கள், குடிநீர், சாலை, மின்விளக்கு போன்ற வசதிகள், ரேஷன் கார்டு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்தே பொதுமக்கள் மனுக்களை அளிக்கின்றனர்.
இந்த மனுக்களை கொடுப்பதற்காக பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள தாசில்தார், ஆர்.டி.ஓ. மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வரவேண்டும். அவ்வாறு வருவதற்கு பஸ்கள் அல்லது கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோக்களில் வரவேண்டிய சூழல் உள்ளது. மேலும் கூட்டம் நடத்தப்படும் நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் குவிவதால் நீண்ட நேரம் காத்திருந்த பின்னரே மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்துச்செல்லும் நிலை உள்ளது.
இதனை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கே நேரடியாக வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று, அந்த பகுதியிலேயே சிறப்பு கூட்டம் நடத்தி மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுப்பதற்காகவே கடந்த ஆண்டு (2019) ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி நந்தனார்புரத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் என மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். அந்த வகையில் மாவட்டம் முழுவதும் தற்போது வரை மொத்தம் 20 ஆயிரத்து 371 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 4 ஆயிரத்து 525 பேர் முதியோர் உதவித்தொகை, திருமண உதவி, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு ரூ.3 கோடியே 93 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story