கோவை பள்ளிகளில் படிக்கும் 1,531 மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்


கோவை பள்ளிகளில் படிக்கும் 1,531 மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
x
தினத்தந்தி 22 Feb 2020 4:00 AM IST (Updated: 22 Feb 2020 6:23 AM IST)
t-max-icont-min-icon

கோவை பள்ளிகளில் படிக்கும் 1,531 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை,

கோவையை அடுத்த குனியமுத்தூர், குளத்துப்பாளையம், சுண்டக்காமுத்தூர், ஆலாந்துறை, தொண்டாமுத்தூர் உள்பட பல்வேறு அரசு மற்றும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், வினா-வங்கி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒரு நாட்டையும், சமுதாயத்தையும் முன்னேற்றுவது கல்வி மட்டும்தான். அதை உணர்ந்து, பள்ளிக்குழந்தைகளுக்கு விலையில்லா மடிக்கணினி, பாடப்புத்தகம் உள்பட படிக்கத் தேவையான அனைத்து சலுகைகளையும் வழங்கி, ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்து விதமான திட்டங்களையும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு (2020-21) பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.34,181.73 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் நேற்று ஒரே நாளில் 1,531 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் உள்பட பல்வேறு அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் எளிய முறையில் படித்து தேர்வில் வெற்றிபெறும் வகையில் மொத்தம் 3,888 வினா-வங்கி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் அரசின் திட்டங்களால் அனைத்து மாணவ-மாணவிகளும் பயன்பெற்று உயர்கல்வி வரை படித்து உயர்ந்த பதவிகளை பெற்றிட வேண்டும்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை யொட்டி கோவையில் 72 ஜோடிகளுக்கு 72 சீர்வரிசைகளுடன் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பிடம், உணவு அருந்தும் அறை, நூலக கட்டிடங்களையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத், மாவட்ட வருவாய் அதிகாரி ராம துரைமுருகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா, கோட்ட வருவாய் அதிகாரி தனலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி மணிமொழி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story