சமூக பாதுகாப்பு திட்டத்தில் உதவித் தொகைகள் பெற கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்
சமூக பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகைகள் பெற கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம் நாளை தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.
திருவண்ணாமலை,
தமிழக அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை, இந்திரகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை, ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை, திருமணம் செய்து கொள்ளாத 50 வயதிற்கு மேற்பட்ட ஏழை பெண்களுக்கான உதவித்தொகை ஆகிய உதவித்தொகைகள் பெறுவதற்காக சொத்து மதிப்பு ரூ.50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. கடந்த ஜனவரி மாதம் 13–ந் தேதி முதல் ரூ.1 லட்சம் வரை இருக்கலாம் என உயர்த்தி உத்தரவிடப்பட்டு உள்ளது.
எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்படி உதவித்தொகையினை தகுதியுள்ள நபர்கள் பெறுவதற்கு ஏதுவாக நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 28–ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை 5 நாட்கள் அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்கள் இந்த உதவித்தொகை பெறுவதற்கான மனுவினை அளித்து பயன் பெறலாம்.
வங்கி மற்றும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள 18 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 காப்பீட்டுத் தொகையாக செலுத்தினால் காப்பீடு தொகை செலுத்தியவருக்கு விபத்தினால் கை, கால் மற்றும் கண்பார்வை ஆகியவை இழப்பு ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையில் இழப்பீடு தொகையும், விபத்தில் சிக்கி மரணமடைந்துவிட்டால் அவரது வாரிசுதாரர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு தொகையும் வழங்கப்படுகிறது.
மேலும் 18 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.330 காப்பீட்டு தொகையாக செலுத்தினால் காப்பீடு தொகை செலுத்தியவர் இயற்கை மரணம் அடைந்தாலோ அல்லது விபத்தின் காரணமாக மரணமடைந்தாலோ அவரது வாரிசுதாரர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. எனவே மேற்படி காப்பீட்டு திட்டங்களில் பொதுமக்கள் சேர்ந்து பயன் பெறலாம்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story