நெல்லை சிந்துபூந்துறையில் தடுப்பு சுவரை உடைத்து தாமிபரணி ஆற்றில் திறந்து விடப்பட்ட கழிவுநீர் குளிக்காமல் திரும்பி சென்ற பொது மக்கள்
நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் மழைக்காலத்தில் விழும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றுக்கு செல்வதற்காக ஒரு கழிவுநீர் ஓடை அமைந்துள்ளது.
நெல்லை,
நெல்லை சிந்துபூந்துறையில் தடுப்பு சுவரை உடைத்து கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பொது மக்கள் குளிக்காமல் திரும்பி சென்றனர்.
கழிவுநீர் ஓடை
நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் மழைக்காலத்தில் விழும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றுக்கு செல்வதற்காக ஒரு கழிவுநீர் ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையில் கழிவுநீர் மட்டுமே தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் சிந்துபூந்துறையில் ஆற்றில் நேரடியாக கலக்காமல் இருக்க பிள்ளையார் கோவில் அருகே தடுப்பு சுவர் கட்டி தனி கால்வாயாக கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் அந்த தனி கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி மாநகராட்சி ஊழியர்கள் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஓடையில் மண் தூர்ந்து கிடப்பதால் அடைப்பை நீக்க தாமதம் ஏற்பட்டது.
ஆற்றுக்கு திறந்து விட்டனர்
இதையடுத்து கழிவுநீர் கால்வாயில் பொங்கி செல்வதை தடுக்க, தடுப்பு சுவரை உடைத்து துளை போட்டனர். அந்த வழியாக கழிவு நீர் செல்வதற்காக மணல் மூடைகளை கால்வாயின் குறுக்கே அடுக்கி தண்ணீரை தாமிரபரணி ஆற்றுக்கு திருப்பி விட்டனர்.
இந்த தண்ணீர் ஆற்றங்கரையில் குளம் போல் பெருகி, அதன் பிறகு சிந்துபூந்துறையில் பொது மக்கள் குளிக்கும் படித்துறைக்கு சென்று தண்ணீரில் கலக்கிறது. இதில் மனித கழிவுகள் உள்பட அனைத்து கழிவுகளும் நேரடியாக தண்ணீரில் கலக்கிறது.
குளிக்காமல் திரும்பினர்
இந்த நிலையில் நேற்று காலை ஆற்றுக்கு குளிக்க வந்த பொது மக்கள் கழிவுநீர் தாங்கள் குளிக்கும் இடத்தில் நேரடியாக கலப்பதை கண்டனர். பின்னர் பெரும்பாலானோர் அங்கு குளிக்காமல் திரும்பிச்சென்றனர். எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வாரி, தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
தாமிரபரணி ஆற்று தண்ணீர் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் உகந்ததா? என்று சமீபத்தில் அதிகாரிகள் தண்ணீர் மாதிரியை சேகரித்து ஆய்வுக்கு எடுத்துச்சென்றுள்ளனர். இந்த நிலையில் கழிவுநீர் நேரடியாக கலப்பதன் மூலம் பொது மக்கள் ஆற்றில் குளிப்பதை தவிர்த்து திரும்பி இருப்பதால், இந்த ஆறு குளிக்க தகுதியற்றதாகி வருகிறது. எனவே சிந்துபூந்துறை பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றும் சிந்துபூந்துறை பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story