அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க வேண்டும் ; மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்
வேலூர் புதிய, பழைய பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையங்களில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பஸ்கள் இயக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் கூறினார்.
வேலூர்,
வேலூர் புதிய பஸ்நிலையம் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.46 கோடியே 51 லட்சத்தில் நவீன மயமாக்கப்பட உள்ளன. 86 பஸ்கள் நிற்கும் வகையில் புதிதாக பஸ்நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைய சுமார் 2 ஆண்டுகளாகும் என்று கூறப்படுகிறது.
அதுவரை பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பஸ்களை இயக்க 2 தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதன்படி வேலூர் புதிய, பழைய பஸ் நிலையங்களில் தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மயானக்கொள்ளை விழாவையொட்டி தற்காலிக பஸ்நிலையங்களில் இருந்து பஸ்ககள் இயக்கப்படும் என்று கலெக்டர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் புதிய பஸ்நிலையத்தில் உள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் செய்யப்பட்டு வரும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, நிழற்கூரை, மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா? என்று பார்வையிட்டார்.
மேலும் பஸ்நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பஸ்கள் வந்து செல்ல வசதியாக ஓட்டலின் அருகேயுள்ள மரங்களை அகற்றவும், கட்டிடங்களை பயணிகள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வுக்கு பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் கூறுகையில், தற்காலிக பஸ்நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய பஸ்நிலையத்தின் நுழைவு வாயிலில் இருந்த ஓட்டல் கட்டிடம் அகற்றப்பட்டு, அங்கு சித்தூர் செல்லும் பஸ்கள் நிற்க இடம் ஒதுக்கப்படும்.
தற்காலிக பஸ்நிலையங்களில் இருந்து நாளை (இன்று) முதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை, ஆரணி செல்லும் பஸ்கள் பழைய பஸ்நிலையத்தில் உள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. அதேபோன்று புதிய பஸ்நிலையத்தில் உள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, திருப்பத்தூர், பெங்களூரு, காஞ்சீபுரம் செல்லும் பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆய்வின்போது வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், 4–வது மண்டல உதவிபொறியாளர் ஆறுமுகம், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story