தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணையத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் நேரில் ஆஜராக விலக்கு கோரி அனுப்பினார்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு கோரி ஒருநபர் ஆணையத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் அனுப்பி உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு கோரி ஒருநபர் ஆணையத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் அனுப்பி உள்ளார்.
துப்பாக்கி சூடு
தூத்துக்குடியில் கடந்த 2018–ம் ஆண்டு மே மாதம் 22–ந்தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
கடந்த 30–5–2018 அன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து தூத்துக்குடி அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், ‘மக்கள் 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நடந்த போராட்டத்தில், கலெக்டர் அலுவலகம், குடியிருப்பு எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சாமானிய மக்கள் கிடையாது. நிச்சயமாக விஷகிருமிகள், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து உள்ளனர். இந்த புனிதமான போராட்டம் கூட ரத்தக்கறையுடன் முடிந்து உள்ளது‘ என்று குறிப்பிட்டு இருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் கடிதம்
இந்த நிலையில், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணைய அதிகாரி மாதம்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். நாளை (திங்கட்கிழமை) முதல் 28–ந்தேதி வரை 19–வது கட்ட விசாரணை நடக்கிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் 25–ந்தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஒருநபர் ஆணையத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், நேரில் ஆஜராகும்போது, ரசிகர்கள் கூடி சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும். அதே நேரத்தில் தேவையான விவரங்களை கேள்வியாக அளித்தால் எழுத்துப்பூர்வமாக பதில் அளிப்பதாகவும் கூறி உள்ளதாக தெரிகிறது.
Related Tags :
Next Story