உணவு கலப்படம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; அதிகாரி பேச்சு


உணவு கலப்படம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; அதிகாரி பேச்சு
x
தினத்தந்தி 23 Feb 2020 4:00 AM IST (Updated: 22 Feb 2020 9:17 PM IST)
t-max-icont-min-icon

தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு, மாணவிகள் உணவு கலப்படம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு முகாமில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி பேசினார்.

புதுக்கோட்டை, 

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் உணவு கலப்பட விழிப்புணர்வு முகாம் புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார்.

இதில் உணவு பாதுகாப்புத்துறை புதுக்கோட்டை மாவட்ட நியமன அதிகாரி டாக்டர் ரமே‌‌ஷ்பாபு கலந்து கொண்டு பேசுகையில், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உணவு பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி இல்லாமல் வாங்க வேண்டாம். இந்த முகாமில் செய்து காண்பிக்கப்பட்ட செயல்முறை விளக்கத்தில் உள்ள கலப்பட பொருட்கள் ஏதேனும் தங்கள் பகுதிகளில் விற்பனைக்கு இருந்தால் வாங்க வேண்டாம்.

உணவு கலப்படம் தொடர்பாக இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 213 சிவில் வழக்குகள், 77 கிரிமினல் வழக்குகள் என மொத்தம் 290 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தங்கள் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு, மாணவிகள் உணவு கலப்படம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கலப்பட பொருட்களை தங்கள் பகுதிகளில் கண்டறிந்தால் 9444042322 மற்றும் 9944959595 என்ற எண்களுக்கு தகவல் தெரிவித்தால் உணவு பாதுகாப்பு துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கார்த்தி, அருண்பிரகா‌‌ஷ் ஆகியோர் உணவு கலப்படம் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். முகாமில் கலந்து கொண்ட மாணவிகள் அனைவருக்கும் விதை பந்துகள் வழங்கப்பட்டன.

Next Story