குமரியில் பரவலாக மழை: பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


குமரியில் பரவலாக மழை: பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 Feb 2020 11:00 PM GMT (Updated: 22 Feb 2020 5:15 PM GMT)

குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இடையிடையே அவ்வப்போது காற்று வீசுவதால் மக்கள் சற்று ஆசுவாசம் அடைந்து வருகிறார்கள். இதே போல நேற்று முன்தினமும் வெயில் வெளுத்து வாங்கியது.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் குமரி மாவட்டத்தில் திடீரென மழை பெய்தது. நாகர்கோவில், சுசீந்திரம், மார்த்தாண்டம், குலசேகரம், சாமிதோப்பு, தென்தாமரைகுளம் மற்றும் மலையோர பகுதிகள், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள் என மாவட்டம் முழுவதிலும் பரவலாக பெய்த மழை காரணமாக வெப்பம் சற்று தணிந்தது.

மழை அளவு

நாகர்கோவிலில் அதிகாலை பெய்ய தொடங்கிய மழை, காலை 8 மணி வரை விட்டு விட்டு பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழை காரணமாக சிறப்பு வகுப்புகளுக்கு சென்ற பள்ளி மாணவ-மாணவிகள் கையில் குடை பிடித்தபடி சென்றனர்.

குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

நாகர்கோவில்-7.6, பூதப்பாண்டி-5.2, கன்னிமார்-7.4, ஆரல்வாய்மொழி-5.8, பாலமோர்-5.2, மயிலாடி-7.2, கொட்டாரம்-5, ஆனைகிடங்கு-8.2, குருந்தன்கோடு-4.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

அணைகளுக்கு நீர்வரத்து

மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதாவது நேற்று முன்தினம் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 385 கனஅடி தண்ணீர் வந்தது. அது நேற்று அதிகரித்து 499 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் அணையில் இருந்து 598 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதே போல பெருஞ்சாணி அணைக்கு 85 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு 139 கனஅடியும் தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி அணையில் இருந்து 353 கனஅடியும், சிற்றார் 2 அணையில் இருந்து 200 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

Next Story