தமிழகத்தில் இதுவரை 1¾ லட்சம் பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் அமைச்சர் சரோஜா தகவல்


தமிழகத்தில் இதுவரை 1¾ லட்சம் பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் அமைச்சர் சரோஜா தகவல்
x
தினத்தந்தி 22 Feb 2020 11:30 PM GMT (Updated: 22 Feb 2020 7:11 PM GMT)

தமிழகத்தில் இதுவரை 1¾ லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.

ராசிபுரம்,

ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியத்தில் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் பெறுவதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த அலுவலக கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா கலந்து கொண்டு 3 ஒன்றியங்களை சேர்ந்த 194 பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

இதேபோல் வெண்ணந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் 42 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை அமைச்சர் வழங்கினார். மேலும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் அறுவை அரங்கு, காது, மூக்கு, தொண்டை பிரிவுகளுக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்களும், ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் நோயாளிகள் காத்திருப்பு ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார். இதில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள் கலந்து கொண்டனர்.

முன்னுரிமை

இதைத்தொடர்ந்து அமைச்சர் சரோஜா பேசும்போது கூறியதாவது:- பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் இதுவரை 9.70 லட்சம் குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர். அரசின் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தில் தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 88 ஆயிரம் பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்த சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. சமூக நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு காப்பகங்களில் படித்த கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் வக்கீல் தாமோதரன், ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் பாலசுப்பிரமணியன், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் பொன்னுசாமி, ராசிபுரம் அட்மா தலைவர் காளியப்பன், வெண்ணந்தூர் ஒன்றியக் குழுத்தலைவர் தங்கம்மாள் பிரகாசம், நாமகிரிப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வடிவேலன், மசக்காளிப்பட்டி கூட்டுறவு சங்கத்தலைவர் பிரகாசம், அத்தனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமதாஸ், மாவட்ட ஊராட்சி செயலாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story