சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற தி.மு.க.வினர் கடுமையாக உழைக்க வேண்டும் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற தி.மு.க.வினர் கடுமையாக உழைக்க வேண்டும் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Feb 2020 11:30 PM GMT (Updated: 22 Feb 2020 8:49 PM GMT)

வருகிற சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் வெற்றி பெற அடுத்த 14 மாதங்கள் தி.மு.க.வினர் கடுமையாக உழைக்க வேண்டும் என விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகர்,

விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விருதுநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன், மேலிடப் பார்வையாளர் முன்னாள் எம்.பி. கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

கடந்த தேர்தல்களில் நாம் தோல்வியுற்றதால் பெரும் இழப்பை சந்தித்துள்ளோம். அடுத்து வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்றால்தான் தி.மு.க.வினர் நினைத்ததை பெற முடியும். அதற்கு அடுத்து வரும் 14 மாதங்கள் தி.மு.க. நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். இதில் யாரும் பின்தங்கிவிடக்கூடாது.

நடவடிக்கை

கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் தி.மு.க. வெற்றி பெற முடியாததால் அந்த ஒன்றிய நிர்வாகிகளை, மாவட்ட நிர்வாகிகள் தகவல் சொல்வதற்கு முன்பே கட்சி தலைமை மாற்றிவிட்டது. எனவே முறையாக கட்சிப்பணி ஆற்றாவிட்டால் கட்சி தலைமை நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 யூனியன்களில் நாம் வெற்றி பெற்ற போதிலும் முறைகேட்டினால் 2 யூனியன்களில் ஆளும்கட்சி வெற்றி பெற்றது. வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. போட்டியிட கட்சி தலைமை ஒதுக்கீடு செய்யவேண்டும். இந்த 7 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும். கடுமையாக உழைத்தால் தான் நமக்கு எதிர்காலம் உண்டு.

மகளிரணி கூட்டம்

விருதுநகரில் கனிமொழி எம்.பி. தலைமையில் மகளிரணி கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொள்ள வேண்டும். கூட்டத்தில் மகளிரணியினர் திரளாக கலந்துகொள்ள தி.மு.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நீக்கம்

தொடர்ந்து மேலிடப்பார்வையாளர் முன்னாள் எம்.பி. கந்தசாமி பேசியதாவது:-

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில், 5 ஒன்றியங்களில் தி.மு.க. நிர்வாகிகள் சரிவர வேலை செய்யாததால் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அதனால் தான் அங்கு மாவட்ட செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் அந்த நிலைமை இல்லை. ஆனாலும் அடுத்து வருகின்ற காலங்களில் நேர்மையாக உழைக்காத தி.மு.க. நிர்வாகிகள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுப்பதோடு பதவிநீக்கமும் செய்ய வாய்ப்புள்ளது. எனவே அனைத்து நிர்வாகிகளும் நேர்மையாக உழைக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story