குட்டத்து ஆவரம்பட்டியில் ஜல்லிக்கட்டு: காளையர்களை பந்தாடிய காளைகள் 15 பேர் காயம்


குட்டத்து ஆவரம்பட்டியில் ஜல்லிக்கட்டு: காளையர்களை பந்தாடிய காளைகள் 15 பேர் காயம்
x
தினத்தந்தி 22 Feb 2020 11:30 PM GMT (Updated: 22 Feb 2020 9:38 PM GMT)

திண்டுக்கல் அருகே உள்ள குட்டத்துஆவரம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளையர்களை, காளைகள் பந்தாடின. இதில் 15 பேர் காயம் அடைந்தனர்.

கன்னிவாடி,

திண்டுக்கல் அருகே உள்ள குட்டத்துஆவரம்பட்டியில் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. திண்டுக்கல் ஆர்.டி.ஓ. உஷா தலைமை தாங்கி கொடியசைத்து வைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். ஆலய பங்குத்தந்தைகள் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கால்நடை பராமரிப்பு துறையினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். மேலும் மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதையடுத்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. முதலில் புனித அந்தோணியார் ஆலய காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 545 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்க மொத்தம் 320 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இவர்கள் சுழற்சி முறையில் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர்.

15 பேர் காயம்

களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க வீரர்கள் போட்டி போட்டனர். மேலும் அடக்க முயன்ற வீரர்களை காளைகள் முட்டி பந்தாடியது. இருப்பினும் ஒரு சில காளைகள் இளைஞர்களின் பிடிக்கு பணிந்தன. ஒரு சில காளைகள் களத்தில் நின்று விளையாடி வீரர்களை பயமுறுத்தியது.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களின் பிடியில் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மின்விசிறி, கட்டில், பீரோ, சைக்கிள், வெள்ளி நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 15 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஏற்கனவே அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டை காண குட்டத்துஆவரம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.


Next Story